'பா.ஜ.க.வின் பி-டீம் இப்போது அதிகாரப்பூர்வமாக அவர்கள் கூட்டணியில் இணைந்துள்ளது' - ஜனதா தளம் குறித்து காங்கிரஸ் விமர்சனம்

கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் பலமுறை கூறியது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-09-22 22:34 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க ஜனதா தளம் (எஸ்) கட்சி முயற்சி எடுத்து வந்தது. இந்த கூட்டணி பற்றி கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா ஆட்சிமன்ற குழு உறுப்பினருமான எடியூரப்பா கடந்த வாரம் கூறினார்.

இதை ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி ஆகியோரும் ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைவது உறுதியானது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) அதிகாரப்பூர்வமாக இணைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கர்நாடகத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் பலமுறை கூறியது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் பி-டீம் ஜனதா தளம்(எஸ்)-அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கமாகி விட்டது. அதுவும் மக்களவையில் முன்னாள் மூத்த ஜனதா தளம்(எஸ்) தலைவர் மீது பா.ஜ.க. எம்பி ஒருவர் மிக அப்பட்டமாக வகுப்புவாத தாக்குதல் நடத்திய நிலையில், அக்கட்சி தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்