இமாசல பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 8 லட்சம் பேருக்கு வேலை, பொது சிவில் சட்டம் அமல்: பாஜக வாக்குறுதி!

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு வரும் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Update: 2022-11-06 15:54 GMT

சிம்லா,

பா.ஜ.க. ஆட்சி நடக்கிற இமாசலபிரதேச மாநிலத்தில், 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு வரும் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இங்கு ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க. போராடுகிறது. அதே நேரத்தில் 2017-ம் ஆண்டு இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டுகிறது.

பாஜக இன்று இமாச்சல மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைநகர் சிம்லாவில் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டு பேசினார்.

பெண்களுக்கு அதிகாரமளித்தலே கட்சியின் முக்கிய நோக்கம் என்ற ஜேபி நட்டா, நாங்கள் சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றினோம், சொல்லாததையும் செய்துள்ளோம் என்றார்.

தேர்தல் அறிக்கையில், மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

மாநில இளைஞர்களுக்கு 8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், ஹிம்-ஸ்டார்ட் அப் திட்டத்திற்கு ரூ.900 கோடி ஒதுக்கப்படும், மாநிலத்திற்கு 5 புதிய மருத்துவ கல்லூரிகள், கிராமப்புற இணைப்பிற்கு ரூ.5,000 கோடி முதலீடு என்பவை இடம்பெற்றுள்ளன.

அத்துடன் பெண்களுக்கு என பிரத்தியேக வாக்குறுதிகளை அறிவித்த பாஜக, அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றும் என உறுதி அளித்துள்ளது.

மேலும், 6 முதல் 12 வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் ஆகியவை வழங்கப்படும், வக்ப் வாரிய சொத்துக்கள் சட்டப்படி விசாரிக்கப்பட்டு அவர்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தினால் அது தடுக்கப்படும், ஆப்பிள் விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக வரையறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்