பா.ஜனதா கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் அசாம் முதல்-மந்திரி பேச்சு
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அசாம் மாநில முதல்-மந்திரி கூறினார்.
மங்களூரு-
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அசாம் மாநில முதல்-மந்திரி கூறினார்.
ஆட்சியை பிடிக்க தீவிரம்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இதையொட்டி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட தலைவர்களும், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதே போல் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் 3 கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்தநிலையில் கர்நாடக மாநிலம் முழுவதும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அசாம் மாநில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, கடந்த சில மாதங்களாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் ஆதரவு
இந்தநிலையில் மங்களூருவில் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநிலம் பா.ஜனதா கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல்காந்தியால் பா.ஜனதா கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை. காங்கிரஸ் கட்சி மக்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பி.எப்.ஜ. அமைப்பை மத்திய அரசு தடை விதித்தது.
இதனால் பி.எப்.ஐ. அமைப்பில் உள்ளவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்ததால் பஜ்ரங்தள அமைப்பை தடை செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. சித்தராமையா ஆட்சி காலத்தில் பி.எப்.ஐ. அமைப்பின் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.
விரோதமான செயல்களில்...
கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 85 சதவீத ஊழல் வழக்குகளில் காங்கிரசிற்கு தொடர்பு உள்ளது. காங்கிரஸ் கட்சி எங்கு ஆட்சியில் இருந்தாலும் அங்கு ஊழல் மட்டும் தான் நடக்கும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே திருப்திபடுத்துகிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் காங்கிரசை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.