நாட்டின் மதச்சார்பின்மை அடித்தளத்தை பாஜக அழித்துவிடும் - மெகபூபா முப்தி

நாட்டின் மதச்சார்பின்மை அடித்தளத்தை வரும் காலத்தில் பாஜக அழித்துவிடும் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-05 08:03 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, வரும் காலங்களில் நாட்டின் அடித்தளமாக உள்ள அரசியலமைப்பையும், மதச்சார்பின்மையையும் பாஜக அழித்துவிடும். நீங்கள் பெருமையுடன் ஏற்றும் மூவர்ணக்கொடியை மாற்றி பாஜக காவிக்கொடியை கொண்டு வருவார்கள்.

ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு மற்றும் ஜம்மு-காஷ்மீர் கொடியை எடுத்துக்கொண்டதுபோல பாஜக இந்த நாட்டின் தேசிய கொடியையும் மாற்றிவிடுவார்கள். ஆனால், நமது கொடியையும், நமது அரசியலமைப்பையும் திரும்ப்பெறுவோம் என நாம் சபதம் எடுத்துள்ளோம்.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்த காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க பாஜகவுக்கு அழுத்தம் கொடுப்போம்' என்றார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதன் 3-ம் ஆண்டு தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்