சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜார்க்கண்டில் இருந்து பா.ஜ.க. துடைத்தெறியப்படும்: ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து நேற்று வெளியானார் என்பது குறிப்பிடத்தக்கது.;

Update: 2024-06-29 12:32 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கைதுசெய்தது. இதையடுத்து நேற்று ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் வாழ்த்தி கோஷமிட்டு வரவேற்றனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இன்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

"எனக்கு எதிராக பா.ஜ.க. சதித்திட்டம் தீட்டியது. அதன் காரணமாகவே நான் சிறை செல்ல நேர்ந்தது. வரும் சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜார்க்கண்ட்டில் இருந்து காவிக் கட்சி துடைத்தெறியப்படும். வரக்கூடிய சட்டசபை தேர்தலில், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு எதிரான கிளர்ச்சி வெடிக்கும். ஜார்க்கண்ட் மக்கள் பா.ஜ.க.வை விட்டுவைக்க மாட்டார்கள்.

 

பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் வந்துவிட்டது. சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது எனக்கு தெரியும். அவர்கள் விரும்பும் எந்த நாளில் வேண்டுமானாலும் தேர்தலை நடத்தட்டும். நான் சவால் விடுகிறேன். வரும் நாட்களில் ஜார்க்கண்டில் இருந்து பா.ஜ.க. துடைத்தெறியப்படும். பல மாநிலங்களில் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களை முதல்-மந்திரிகளாக ஆக்கி இருப்பதாக பா.ஜ.க. கூறுகிறது. ஆனால், அவர்கள் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்