கர்நாடகத்தின் உத்தரவாத திட்டங்களை காப்பி அடிக்கும் பா.ஜனதா; ராகுல் காந்தி பேச்சு

கர்நாடகத்தின் உத்தரவாத திட்டங்களை பா.ஜனதா காப்பி அடிப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.;

Update: 2023-08-30 21:34 GMT

பெங்களூரு:

மைசூருவில் நடைபெற்ற கிரகலட்சுமி திட்ட தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாங்கள் உங்களுக்கு(மக்களுக்கு) 5 உத்தரவாதங்களை வழங்கினோம். நாங்கள் அதில் 3 திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம். 4-வதாக இன்று (நேற்று) கிரகலட்சுமி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மறக்க முடியாத திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம். கர்நாடக மாதிரி திட்டங்கள் நாட்டின் அரசியல் திசையையே மாற்றும். உங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தான் இவை.

உங்களின் வங்கி கணக்கிற்கு இன்று(நேற்று) தலா ரூ.2 ஆயிரம் வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை இந்த உதவித்தொகை உங்களுக்கு வரும். 5 உத்தரவாத திட்டங்களில் 4 திட்டங்கள் பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் திட்டம் ஆகும். நமது நாட்டின் அடித்தளமே பெண்கள் தான். அதனால் தான் உங்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்த நாங்கள் திட்டங்களை அமல்படுத்துகிறோம்.

சமையல் கியாஸ் சிலிண்டர் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. நான் ஒற்றுமை பாதயாத்திரை மேற்கொண்டபோது, ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்களிடம் பேசும்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். பெண்களின் பலம் யாருக்கும் தெரியாது. காநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திற்கு வர பெண்களின் பங்கு முக்கியமானது.

கடந்த 100 நாட்களில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தொழில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. எங்களின் உத்தரவாத திட்டங்களை மத்திய அரசு விமர்சனம் செய்தது. ஆனால் இப்போது இதை பார்த்து பா.ஜனதா காப்பி அடிக்கிறது. காங்கிரஸ் பொய் பேசுவதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மை உங்களின் கண் முன்பு இருக்கிறது.

சக்தி திட்டத்தால் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கிறார்கள். அவர்கள் சுற்றுலா செல்கிறார்கள். அன்ன பாக்கிய திட்டத்தால் ஏழை மக்கள் மூன்று நேரம் சாப்பிடுகிறார்கள். இலவச மின்சாரத்தால் மிச்சமாகும் பணத்தை கொண்டு மக்கள் தங்களின் கல்விக்கு செலவழிக்கிறார்கள். இவை காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களால் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் ஆகும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்