தாக்கப்பட்ட ஆம் ஆத்மி பெண் எம்.பி.க்கு ஆதரவாக கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம்
பெண் எம்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரனை நடத்தினால் பெரிய உண்மைகள் வெளிவரும் என டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மலிவால் நேற்று முன்தினம் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சுவாதி மாலிவாலின் இந்த குற்றச்சாட்டை, ஆம் ஆத்மி கட்சியின் எம்பி-யான சஞ்சய் சிங்கும் நேற்று உறுதி செய்ததோடு, இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சுவாதி மாலிவால் முதல்-மந்திரியின் வீட்டில் தாக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பா.ஜ.க.வினர் இன்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், "சுவாதி மாலிவால் தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினால் பெரிய உண்மைகள் வெளிவரும். முதல்-மந்திரியின் வீட்டிலேயே அவரது கட்சி எம்.பி. தாக்கப்படுகிறார் என்றால் டெல்லியின் நிலைமையை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இந்த சம்பவம் தொடர்பாக கெஜ்ரிவால் ஏன் அமைதியாக இருக்கிறார்" என்றார்.