டெல்லி சுகாதார மந்திரி கைது: கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்

டெல்லி சுகாதார மந்திரி கைது செய்யப்பட்ட சம்பவத்தில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-05-31 22:08 GMT

Image Courtesy: PTI

புதுடெல்லி,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, முதல்-மந்திரி கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. இது அரசியல் உள்நோக்கத்துடன் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, 'சத்யேந்தர் ஜெயினின் கைது அரசியல் பழிவாங்கல், இமாசலபிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுடன் தொடர்புடையது என்று ஆம் ஆத்மி கட்சி கூறுவது சரியல்ல. ஊழல் வழக்கு நடைமுறைகளை எந்த கோர்ட்டும் தடை செய்வதில்லை.

ஊழல் விஷயத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுள்ளது. அதை எப்போதும் தொடரும்.

ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவின் பேரிலேயே மந்திரி சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே கெஜ்ரிவாலும், சத்யேந்தர் ஜெயினும் ராஜினாமா செய்ய வேண்டும்' என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், 'சத்யேந்தர் ஜெயின் மீதான வழக்கு முற்றிலும் பொய்யானது. அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையில் ஜோடிக்கப்பட்டது. எங்கள் அரசும், ஆம் ஆத்மி கட்சியும் மிகவும் நேர்மையானவை.

நீதித்துறையின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். சத்யேந்தர் ஜெயின் குற்றமற்றவராக வெளியே வருவார். அவர் மீதான பொய் வழக்கு நீடிக்காது' என்றார்.

சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் கூறுவது பற்றி கேட்டபோது, 'அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். சத்யேந்தர் ஜெயின் மீதான குற்றச்சாட்டில் ஒரு சதவீதம் உண்மை இருந்தாலும் நான் நடவடிக்கை எடுத்திருப்பேன்' என்று கெஜ்ரிவால் கூறினார்.

இதற்கிடையில், சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயினை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் அமர்வு முன் அமலாக்கத்துறையினர் நேற்று ஆஜர்படுத்தினர்.

அவரை வருகிற 9-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்