பா.ஜனதா 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற விரும்புவதற்கு காரணம் இதுதான்: சரத்பவார்
அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய பா.ஜனதா 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற விரும்புவதாக சரத்பவார் குற்றம்சாட்டி உள்ளார்.;
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி வேட்பாளர் சுப்ரியா சுலேயை ஆதாித்து புனே பாராமதி, சஸ்வத் தாலுகாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் சரத்பவார் கலந்து கொண்டார். கூட்டத்தில் மகளும், பாராமதி வேட்பாளருமான சுப்ரியா சுலேயை ஆதரித்து அவர் பேசியதாவது:-
டெல்லி முதல் - மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரம் நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது. எனவே நாட்டை பாதுகாக்க நாம் அவர்களை முதலில் தோற்கடிக்க வேண்டும்.
நாடு எப்படி செயல்பட போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், தற்போது நடைபெற உள்ள தேர்தல் இதற்கு முன்நடந்த தேர்தல்களை விட மாறுபட்டது. நாடு ஜனநாயக முறையில் நடக்க வேண்டும். ஆனால் நாம் கவலையில் உள்ளோம். அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய பா.ஜனதா 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற விரும்புகிறது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் 'எக்காளம்' சின்னம் கண்ணில் படுகிறது. சுப்ரியா சுலேவுக்கு ஓட்டுப்போட்டு அவரை பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.