ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: 15 வேட்பாளர்களை கொண்ட திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான 15 வேட்பாளர்களை கொண்ட திருத்தப்பட்ட பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

Update: 2024-08-26 08:30 GMT

கோப்புப்படம்

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

காஷ்மீர் தேர்தலில் காங்கிரசும் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் சி.பி.எம். கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், சில தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சியினர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கையோடு, எங்கள் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியை ஆதரிக்க தயார் என தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 44 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜனதா மேலிடம் இன்று காலை வெளியிட்டது. அறிவித்த சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. திரும்பப் பெற்றது. மேலும் புதிய வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் பா.ஜ.க. தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது 15 பேர் கொண்ட புதிய பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்