'சந்தேஷ்காளியில் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக பா.ஜ.க.வினர் திட்டமிட்டு பொய்களை பரப்பியுள்ளனர்' - திரிணாமுல் காங்கிரஸ்

சந்தேஷ்காளியில் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக பா.ஜ.க.வினர் திட்டமிட்டு பொய்களை பரப்பியதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.;

Update:2024-05-06 03:14 IST

கொல்கத்தா,

சந்தேஷ்காளி பகுதியில் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக கூறப்படுவது பா.ஜ.க.வினரின் திட்டமிட்ட சதி எனவும், அவ்வாறு அங்கு எதுவும் நடைபெறவே இல்லை எனவும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி பஞ்சா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"சந்தேஷ்காளியில் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாக பா.ஜ.க.வினர் திட்டமிட்டு மிகவும் மோசமான பொய்களை பரப்பியுள்ளனர். இதில் சுவேந்து அதிகாரிக்கு தொடர்பு உள்ளது. சந்தேஷ்காளியில் உள்ள பெண்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.

சந்தேஷ்காளியில் உள்ள பெண்கள் இதுபோன்ற சாட்சிகளை கூறுவதற்காக துன்புறுத்தப்பட்டுள்ளனர். மேற்கு வங்காளத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். ஆனால் பெண்களின் அதிகாரத்தை பறிப்பதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது."

இவ்வாறு அவர் தெரிவித்தார். சமீபத்தில் சந்தேஷ்காளியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று மேற்கு வங்காளத்தில் வேகமாக பரவியது. அதில், பா.ஜ.க. பூத் ஏஜெண்ட் என்று கூறப்படும் கங்காதர் கோயல் என்ற நபர், சந்தேஷ்காளியில் பாலியல் வன்கொடுமை எதுவும் நடைபெறவில்லை என்று கூறியிருந்தார். இந்த வீடியோ விவகாரம் மேற்கு வங்காள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்