பா.ஜனதா, காங்கிரஸ் இணைந்து ஜனதா தளம்(எஸ்) கட்சியை அழிக்க முயற்சி; முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா குற்றச்சாட்டு
பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஜனதா தளம் (எஸ்) கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா குற்றம்சாட்டி உள்ளார்.;
ஹாசன்:
பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஜனதா தளம் (எஸ்) கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா குற்றம்சாட்டி உள்ளார்.
ஜனதா தளம்(எஸ்) கட்சி
ஹாசனில் நேற்று முன்னாள் மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி.ரேவண்ணா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹாசன் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 4 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சி பிடித்துள்ளது. வருகிற ஆண்டுகளில் அனைத்து தொகுதியையும் ஜனதா தளம் (எஸ்) கட்சி பிடிக்கும். கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
இன்னும் 10 ஆண்டுகளில் ஜனதா தளம் (எஸ்) அதிக இடங்களை பிடித்து தனித்து ஆட்சி அமைக்கும். அவ்வாறு ஆட்சி அமையும் போது, ஹாசன் மாவட்டம் மாநிலத்திலேயே முதலாவது மாவட்டமாக விளங்கும். நான் உயிருடன் இருக்கும் வரைக்கும் இதை நிறைவேற்றிய தீருவேன். கர்நாடகத்தை பொறுத்தவரையில் தேசிய கட்சிகள், ஜனதா தளம் (எஸ்) கட்சியை அழிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
யாராலும் அழிக்க முடியாது
ஆனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியை யாராலும் அழிக்க முடியாது. எங்களுக்கு மக்களின் துணை உள்ளது. அவர்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். இந்த முறை செய்த சில தவறுகளை திருத்தி கொண்டு, அடுத்த முறை முழு பலத்துடன் ஜனதா தளம் (எஸ்) கட்சி களம் இறங்கும். அதற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) தனித்துதான் போட்டியிடும். காங்கிரஸ் கட்சியில் யார் முதல்-மந்திரி என்பதில் போட்டி நிலவி வருகிறது. என்னை பொருத்த வரையில் யார் முதல்வராக வந்தாலும் ஏற்று கொள்கிறேன். ஆனால் மக்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தை அவர்கள் நிறைவேற்றவேண்டும். அதை மறந்துவிட கூடாது.
இவ்வாறு அவர் கூறினாா்.