பா.ஜனதா தேசிய மகளிர் அணி செயற்குழு கூட்டம்

பா.ஜனதா தேசிய மகளிர் அணி செயற்குழு கூட்டம் நாளை துமகூருவில் நடைபெற உள்ளதாக மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.

Update: 2023-01-18 20:27 GMT

பெங்களூரு:-

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெண்களின் முன்னேற்றம்

பா.ஜனதா தேசிய மகளிர் அணி செயற்குழு கூட்டம் வருகிற 20-ந் தேதி (நாளை) துமகூருவில் நடைபெற உள்ளது. எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் விருப்பப்படி இந்த கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தொடங்கி வைக்கிறார். மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி பெண்களுக்கு சிறப்பு மரியாதை அளித்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். நாளை மறுநாள் செயற்குழுவின் நிறைவு கூட்டம் நடைபெறும்.

மாயமாகி விடுவார்கள்

இதில் கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கலந்து கொண்டு பேசுகிறார். நான் தலைவி என்ற பெயரில் காங்கிரஸ் மகளிர் அணியினர் மாநாடு நடத்தினர். அதில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். நான் தலைவி என்று சொன்னவர்கள், தேர்தலுக்கு பிறகு மாயமாகி விடுவார்கள். மேலும் கர்நாடக பா.ஜனதா மகளிர் அணி மாநாடு வருகிற 28 அல்லது 29-ந் தேதி அன்று நடைபெற உள்ளது. காங்கிரசார் பொய் மற்றும் அறிவியலுக்கு மாறான வாக்குறுதிகளை அறிவிக்கிறார்கள்.

சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பெண்களின் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இது சாத்தியமா?. இது மோசமான அரசியலை காட்டுகிறது. அறிவார்ந்த பெண்கள் இதை நம்ப மாட்டார்கள்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்