பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கர்நாடகம் வருகை; சாம்ராஜ்நகரில் 'விஜய சங்கல்ப யாத்திரை'யை தொடங்கி வைத்தார்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சாம்ராஜ்நகருக்கு பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வந்தார். அவர் பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்கி வைத்தார்.

Update: 2023-03-01 20:56 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி, பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதாவின் தேசிய தலைவர்கள் அடிக்கடி கர்நாடகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் அவர்கள் கர்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

மக்கள் நலத்திட்டகளையும் தொடங்கி வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகத்தின் 4 திசைகளில் இருந்தும் பா.ஜனதா சார்பில் தேர்தலை கருத்தில் கொண்டு விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்து இருந்தார்.

சாமி தரிசனம்

அதன்படி சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள மலை மாதேஸ்வரா கோவில் வளாகத்தில் வைத்து நேற்று பா.ஜனதா சார்பில் 'விஜய சங்கல்ப யாத்திரை' தொடங்கியது. இது கர்நாடகத்தின் தெற்கு திசையில் இருந்து தொடங்கப்படும் விஜய சங்கல்ப யாத்திரை ஆகும். இதை தொடங்கி வைப்பதற்காக நேற்று பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சாம்ராஜ்நகருக்கு வந்தார். அவர் முதலில் மலை மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகளும் செய்து வழிபட்டார்.

அவருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி., மத்திய மந்திரி ஷோபா, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா உள்பட பலர் உடனிருந்தனர்.

விஜய சங்கல்ப யாத்திரை

அதையடுத்து பா.ஜனதா கொடி வண்ணத்தில் உருவாக்கப்பட்டு இருந்த ரதத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட பலர் ஏறினர். அவர்கள் ஏறியதும் விஜய சங்கல்ப யாத்திரையை பா.ஜனதா கட்சி கொடியை அசைத்து ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். அதையடுத்து அவரும் ரதத்தில் ஏறி சிறிது தூரம் பயணித்தார். பின்னர் அவர் அங்கு திரண்டிருந்த பழங்குடியின மக்களான சோலிகா இன மக்களை சந்தித்து பேசினார். அதையடுத்து அவர் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

நாட்டில் 27 இடங்களில் பழங்குடியின மக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சுமார் 36 ஆயிரம் பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் உள்ளதாக இதுவரையில் கண்டறியப்பட்டு உள்ளன. அவை அனைத்திலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாதிரி கிராமங்களாக உருவாக்கப்படும். இந்த பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான அனைத்து வசதிகளும் உருவாக்கி கொடுக்கப்படும். இது என்னுடைய உறுதி.

பிரதமர் மோடி

மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், நந்தகடாவில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா நினைவிடத்தில் இருந்து விஜய சங்கல்ப யாத்திரையை வியாழக்கிழமை அன்று(இன்று) தொடங்கி வைக்கிறார். பசவகல்யாணில் புதிய அனுபவ மண்டபம் கட்டப்பட்டு வரும் இடத்தையும், தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சிலையையும் உள்துறை மந்திரி அமித்ஷா வெள்ளிக்கிழமை(நாளை) பார்வையிடுகிறார். பின்னர் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய சங்கல்ப யாத்திரையை அவர் தொடங்கி வைக்கிறார். தேர்தலை கருத்தில் கொண்டு வருகிற 25-ந் தேதி வரை கர்நாடகத்தின் 4 திசைகளில் இருந்து விஜய சங்கல்ப யாத்திரை தொடங்கி நடத்தப்படும். இந்த சந்தர்ப்பத்தில் கட்சி தலைவர்கள் மக்களை நேரில் சந்திப்பார்கள். வருகிற 25-ந் தேதி தாவணகெரேவில் நடைபெறும் ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

4 கோடி மக்களை சந்திக்க திட்டம்

20 நாட்களில் விஜய சங்கல்ப யாத்திரை மூலம் 31 மாவட்டங்களிலும் பா.ஜனதா தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள். இதன்மூலம் 224 தொகுதிகளிலும் 4 கோடி மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். இவை தவிர 80-க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார் சைக்கிள் பேரணிகள், 75 இடங்களில் பொதுக்கூட்டங்க்ள், 150 இடங்களில் ரோடு ஷோக்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்