நாடாளுமன்ற அத்துமீறலின்போது பாஜக எம்.பிக்கள் பயந்து ஓடிவிட்டனர் - ராகுல் காந்தி தாக்கு

அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி நாடாளுமன்ற குளிர் காலகூட்டத்தொடரில் இருந்து 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-12-22 10:41 GMT

புதுடெல்லி,

கடந்த 13-ஆம் தேதி மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். இதுகுறித்து அவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் தற்போது வரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றன.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இதில் பேசிய ராகுல் காந்தி, "சில இளைஞர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து புகை குப்பிகளை வீசியவுடன், தங்களை தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜக எம்.பி.க்கள் ஓடிவிட்டனர். நாங்கள் இதைக் கண்டோம். ஆனால், ஊடகங்களில் அது ஒளிபரப்பப் படவில்லை.

மக்களவை பாதுகாப்பு மீறல் குறித்த சம்பவத்தில் ஒரு கேள்வி இருக்கிறது. ஆனால், அவர்கள் ஏன் இந்த வழியில் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டம்தான் இதற்கு பதில். நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஊடகங்கள் பேசவில்லை. ஆனால், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டம் செய்து கொண்டிருந்தபோது, நான் பதிவு செய்த வீடியோவைப் பற்றி பேசுகிறார்கள்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்