பாஜக மீது அதிருப்தி? பங்கஜா முண்டே பேச்சால் மராட்டிய அரசியலில் பரபரப்பு

" நான் பா.ஜனதாவுக்கு சொந்தமானவள், பா.ஜனதா எனக்கு சொந்தமானது அல்ல " என பங்கஜா முண்டே பேசி உள்ளார்.

Update: 2023-06-02 12:25 GMT

மும்பை,

பா.ஜனதாவை சேர்ந்த மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே. மராட்டியத்தில் 2014-ல் பா.ஜனதா ஆட்சியை பிடித்த போது, முதல்-மந்திரிக்கான போட்டியில் இருந்தவர். எனினும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். பங்கஜா முண்டே மந்திரியானார். அதன்பிறகு 2 பேருக்கும் பனிப்போர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2019-ம் நடந்த சட்டசபை தேர்தலில் பங்கஜா முண்டே தோல்வியை தழுவினார். அதன்பிறகு பங்கஜா முண்டே கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தற்போது அவர் பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார்.

டெல்லியில் நடந்த அகில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாள் விழாவில் பங்கஜா முண்டே கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், " பா.ஜனதா மிகப்பெரிய கட்சி. நான் பா.ஜனதாவுக்கு சொந்தமானவள். ஆனால் பா.ஜனதா எனக்கு சொந்தமானது அல்ல. எனக்கு எனது தந்தையுடன் பிரச்சினை இருந்தால், சகோதரன் வீட்டுக்கு செல்வேன். எனக்கு எதுவும் கிடைக்கவில்லை எனில், நான் எனது தோட்டத்துக்கு சென்று கரும்பு வெட்டவும் ஆர்வமாக உள்ளேன். " என்றார்.

கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் பங்கஜா முண்டே இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பங்கஜா முண்டே பேச்சு குறித்து மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், " ஒவ்வொரு முறையும் அவர் பேசும் போது, அதற்கு வேறு அர்த்தம் காணப்படுகிறது. ஆனால் அவர் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். " என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்