முதல்-மந்திரி சித்தராமையாவை பாராட்டி பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ- கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையாவை பா.ஜனதா சேர்ந்த எம்.எல்.ஏ., பாராட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-07-02 13:45 GMT

பெங்களூரு,

பெங்களூருவில்று காகினெலே மகா சமஸ்தானா மடம் சார்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். இதில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

எனது தொகுதியில் காகினெலே மடத்தின் கிளை அமைவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. முன்பு 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது எனது யஷ்வந்த்பூர் தொகுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கினார். அதனால் எனது தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டேன். அதன் காரணமாக இந்த தொகுதியில் 2-வது முறையாக நான் வெற்றி பெற்றேன். அரசியலில் நான் வேறு கட்சிக்கு சென்றாலும், நான் எப்போதும் சித்தராமையாவை மறக்கவில்லை.

சித்தராமையா எப்போதும் சொல்வதை நிறைவேற்றும் அரசியல்வாதி. விரோத அரசியல் செய்யாமல் ஏழை மக்களுக்கு சேவையாற்றும் பணிகளை மேற்கொள்கிறார். மக்களின் நாடித்துடிப்பு என்ன என்பது அவருக்கு நன்கு தெரியும். அவர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். எனது தொகுதிக்கு அவர் 2-வது முறையாக வந்துள்ளார். அவரது அபிமானியாக, சிஷ்யனாக அவரை நான் மனதார வரவேற்கிறேன். இந்த மடத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு சித்தராமையா எனக்கு உத்தரவிட்டுள்ளார். அவரது இந்த உத்தரவை நான் பின்பற்றுவேன். இவ்வாறு எஸ்.டி.சோசேகர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்