சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 25 ஆண்டுகள் சிறை

2014ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

Update: 2023-12-15 15:34 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டம் துப்தி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம்துலர் கோந்த். இவர் 2014ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் சகோதரன் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சம்பவம் நடைபெற்ற சமயத்தில் ராம்துலர் கோந்த் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால், அவரது மனைவி பஞ்சாயத்து தலைவியாக செயல்பட்டு வந்தார். மேலும், ராம்துலர் துப்தி தொகுதியில் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார். அதன் பின்னர், பாஜகவில் இணைந்த ராம்துலர் கோந்த் எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே எம்.எல்.ஏ. ராம்துலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எம்.எல்.ஏ. ராம்துலர் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளி ராம்துலருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.

இதையடுத்து, குற்றவாளி ராம்துலர் சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் ராம்துலர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்