பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னாலுக்கு 2-வது நோட்டீஸ்

ராகுல்காந்தி பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னாலுக்கு 2-வது நோட்டீஸ் அனுப்பி தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2023-05-07 22:32 GMT

ராய்ச்சூர்:-

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா நகர தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பசனகவுடா பட்டீல் யத்னால். பா.ஜனதாவை சேர்ந்த இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்த போது அவரை பற்றியே சர்ச்சை கருத்துக்களை கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றியும் அவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை விஷப்பாம்பு என்று கூறியிருந்தார். பின்னர் அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த பசவனகவுடா பட்டீல் யத்னால், சோனியா காந்தியை விஷக்கன்னி என்று கடுமையாக சாடியிருந்தார். ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது தனிப்பட்ட முறையில் தாக்கி பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி பேசிய பசனகவுடா பட்டீல் யத்னாலுக்கு உரிய விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி இருந்தது.

அதைத்தொடர்ந்தும் அவர் ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை பற்றி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தார். சமீபத்தில் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கியில் நடந்த பிரசாரத்தில் பேசிய பசனகவுடா பட்டீல் யத்னால், ராகுல்காந்தி பற்றி மிகவும் தரம்தாழ்ந்து விமர்சித்தார். அதாவது அரை பைத்தியக்காரன் என கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து பசனகவுடா பட்டீயல் யத்னாலுக்கு 2-வது முறையாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது ராகுல்காந்தி பற்றிய தனிப்பட்ட விமர்சனம் தொடர்பாக 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மஸ்கி தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தொடர்ந்து இதுபோன்ற வகையில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பசனகவுடா பட்டீல் யத்னாலுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்