கூட்டணி கட்சியை விழுங்கும் மலைப்பாம்பு பா.ஜனதா- உத்தவ் சிவசேனா

கூட்டணி கட்சியை விழுங்கும் மலைப்பாம்பு, முதலை போன்றது பா.ஜனதா என உத்தவ் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் எம்.பி. தாக்கி பேசினார்.

Update: 2023-05-28 00:23 GMT

கூட்டணி கட்சி குற்றச்சாட்டு

தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக அந்த கட்சியை சேர்ந்த கஜானன் கிரித்திகர் எம்.பி. குற்றம்சாட்டி இருந்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், " நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். எங்கள் வேலை அதன்படி நடக்க வேண்டும். கூட்டணியில் இருப்பவர்களுக்கு சரியானது கிடைக்க வேண்டும். நாங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவதாக உணருகிறோம்" என்றார்.

ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு சிவசேனாவை உடைத்து, பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவரது கட்சியை சேர்ந்த மூத்த எம்.பி. பா.ஜனதா குறித்து தெரிவித்து உள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலைப்பாம்பு பா.ஜனதா

இந்தநிலையில் கஜானன் கிரித்திகர் எம்.பி. கருத்து தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

இதுபோன்ற காரணங்களுக்காக தான் உத்தவ் தாக்கரே 2019-ல் பா.ஜனதாவிடம் இருந்து விலகி சென்றார். எங்கள் கட்சியை அழிக்க முயன்றதால் பா.ஜனதாவிடம் இருந்து விலகினோம். பா.ஜனதா முதலை அல்லது மலைப்பாம்பு போன்றது. அவர்களுடன் செல்பவர்கள் (கூட்டணி கட்சி) விழுங்கப்படுவார்கள்.

தற்போது அவர்கள் (ஏக்நாத் ஷிண்டே தரப்பினர்) இந்த முதலையிடம் (பா.ஜனதா) இருந்து உத்தவ் தாக்கரே விலகியது சரிதான் என்பதை உணருவார்கள். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது. கஜானன் கிரித்திகர் சொன்னது தான் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் நிலைப்பாடு. அவர்கள் (பா.ஜனதா) கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள். சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு நிதி ஒதுக்காமல் இருந்தனர். சிவசேனா தலைவர்களை அவமதிக்க முயற்சி செய்தார்கள். எனவே கட்சி நலன் மற்றும் மாநிலத்தின் மாண்புக்காக உத்தவ் தாக்கரே அவர்களுடனான கூட்டணியை முறிக்கும் முடிவை எடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்