தீபாவளிக்கு பிறகு காற்றின் தரம் மீண்டும் மோசம்: பா.ஜ.க.வை குற்றம்சாட்டும் டெல்லி மந்திரி

தீபாவளி பண்டிகையின்போது காலை முதல் இரவு வரை வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு மீண்டும் மோசமான நிலையை எட்டியது.

Update: 2023-11-13 08:28 GMT

டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் மிக மோசமான அளவில் இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். வியாழக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக, காற்று மாசு சற்று குறைந்தது. சனிக்கிழமையன்று 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்றின் தரம் 220 என்ற அளவிற்கு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையின்போது காலை முதல் இரவு வரை வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு மீண்டும் மோசமான நிலையை எட்டியது. இன்று காலை நிலவரப்படி ஆனந்த் விகார் பகுதியில் காற்றின் தரம் 312 ஆகவும், ஆர்.கே.புரம் பகுதியில் 305 ஆகவும் பதிவாகியிருந்தது.

இந்த அளவுக்கு காற்று மாசுபட்டதற்கு பாஜக தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சுதான் காரணம் என டெல்லி மந்திரி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதுபற்றி டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் கூறுகையில், "டெல்லியில் பெரும்பாலான இடங்களில் மக்கள் பட்டாசுகளை வெடிக்காத நிலையில், சில இடங்களில் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்துள்ளனர். காற்றின் தரம் மேலும் மோசமடைந்துவிடக்கூடாது என மக்கள் நினைத்தனர். ஆனால், பட்டாசு வெடிப்பதற்கு பாஜக தலைவர்கள் ஊக்குவித்ததால், அதற்கான விலையை டெல்லி கொடுக்கிறது. பட்டாசுகளை வெடிக்கவில்லை என்றால் டெல்லியின் காற்று சுத்தமாக இருந்திருக்கும்" என்றார்.

இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்துள்ளது. இதுபற்றி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறும்போது, "டெல்லியில் குறைந்த அளவிலேயே பசுமை பட்டாசுகளை மக்கள் வெடித்தனர். தீபாவளியை மக்கள் கொண்டாடுவதில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுக்கு பிரச்சினை உள்ளது. சனாதன மக்கள் தீபாவளியை கொண்டாடுவதுதான் அவர்களின் கவலையாக உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்