மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்ட காவல் துறை அதிகாரி

மேற்கு வங்காளத்தில் காவல் துறை அதிகாரி ஒருவரை பா.ஜ.க. தொண்டர்கள் கடுமையாக தாக்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Update: 2022-09-14 03:31 GMT


கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக கொல்கத்தா நகரில் பா.ஜ.க. சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் பேரணி ஒன்று நடத்த முடிவானது.

இந்த பேரணியில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் கொல்கத்தா நகருக்கு படையெடுத்தனர். எனினும், அவர்களை பல இடங்களில் போலீசார் வரவிடாமல் தடுத்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில், ராணிகஞ்ச், போல்பூர் மற்றும் துர்காப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வெளியே பா.ஜ.க. தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால், தொண்டர்கள் பலரை போலீசார் கைது செய்து, தடுப்பு காவலுக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி அபிஜித் தத்தா என்ற பா.ஜ.க. மூத்த தலைவர் கூறும்போது, துர்காப்பூர் ரெயில் நிலையம் அருகே எங்களுடைய 20 தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ரெயில் நிலையம் செல்வதற்கான வழிகளையும் அவர்கள் அடைத்து விட்டனர். இதனால், வேறு சில வழிகளை பயன்படுத்தி நான் வந்துள்ளேன் என கூறினார்.

இந்த பேரணியை தடுப்பதற்காக கொல்கத்தா எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோன்று ஹவுரா நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்த வழியில், தடுப்பு வேலிகளை அமைத்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி கூறும்போது, மக்கள் ஆதரவு முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு இல்லை. அதனால், சர்வாதிகார போக்கை அவர் கையாளுகிறார். வடகொரியா போன்று வங்காளம் உள்ளது. போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் விலை கொடுப்பார்கள். பா.ஜ.க. வந்து கொண்டிருக்கிறது என கூறினார்.

இதனை தொடர்ந்து, பா.ஜ.க. பேரணியில் கலந்து கொள்ள சென்ற சுவேந்து அதிகாரி, ராகுல் சின்கா மற்றும் பெண் எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களை லால்பஜாரில் உள்ள கொல்கத்தா காவல் துறை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர்.

கொல்கத்தா நகரின் ஒரு பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது. ஒரு புறம் கற்களை வீசி தாக்குதல் நடத்தியும், கம்புகளை கொண்டு அடித்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. மற்றொரு புறம் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சியடித்து தொண்டர்களை கலைந்து செல்ல செய்வதும் நடந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் போலீசாரின் கார் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இதில் போலீசார் ஒருவர் பா.ஜ.க. தொண்டர்களால் சூழப்பட்டு கடுமையாக கம்புகள் உள்ளிட்டவற்றால் தாக்கப்பட்டார்.

முதலில் வெள்ளை சீருடை அணிந்த கொல்கத்தா போலீசார் தொண்டர்களால் கடுமையாக தாக்கப்படுகிறார். இதன்பின்பு, அவர் எதிர்த்து தாக்கியதும் சுற்றி இருந்தவர்கள் தப்பியோடினர். ஆனால், காக்கி சீருடை அணிந்த மற்றொரு காவலரை பா.ஜ.க. தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அவர்களில் சிலரது கைகளில் பா.ஜ.க. கட்சி கொடியும், சிலர் காவி வண்ண உடையணிந்தபடியும் காணப்பட்டனர். அவர்களின் பிடியில் இருந்து அவர் தப்பியோடுகிறார். தொண்டர்களும் விரட்டுகின்றனர். ஒரு கட்டத்தில் போலீசார் வைத்த தடுப்பான்களால் அதற்கு மேல் செல்ல முடியாமல் அவர் சிக்கி கொள்கிறார்.

அவர் மீது மூங்கில் கம்புகள் உள்ளிட்டவற்றால் கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது. பின்னர் வேறு சிலர் வந்து அவரை மீட்டு சென்றனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

இதற்கு போலீசாரே காரணம் என பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி சுபாஷ் சர்கார் கூறியுள்ளார். அவர் கூறும்போது, ரெயில் நிலையத்தில் வந்து இறங்குவதற்குள் போலீசார் பா.ஜ.க. தொண்டர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டு உள்ளது. தலைமை செயலகத்திற்கு ஒரு கி.மீ. தொலைவிலேயே தடுப்பான்களை அமைத்து உள்ளனர் என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்