விவசாயிகளின் வலியைப் போக்க பாஜக உழைத்திருக்கிறது- ஜேபி நட்டா பேச்சு

விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை எடுத்துரைத்த நட்டா, அவற்றை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-09-20 11:08 GMT

Image Tweeted By @BJP4Gujarat 

அகமதாபாத்,

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் சென்றுள்ளார். இரண்டு நாள் பயணத்தின் முதல் நாளான இன்று ஜேபி நட்டா தலைவர் காந்திநகரில் நமோ கிசான் பஞ்சாயத்து திட்டத்தின் ஒரு பகுதியாக எலக்ட்ரிக் பைக்குகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான மத்திய அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்த நட்டா, அவற்றை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஜேபி நட்டா பேசியதாவது:-

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம் என்றால் அது கொரோனா தொற்று தான். அந்த சமயங்களில் பிரதமர் மோடி 'கரிப் கல்யாண் அன்ன யோஜனா' என்ற திட்டத்தை செயல்படுத்தி 80 கோடி மக்களுக்கு 5 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி மற்றும் பருப்புகளை வழங்கி ஏழை மக்களை வலுப்படுத்த பாடுபட்டார்.

விவசாயிகளைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. ஆனால் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி செய்தார். விவசாயிகளுக்கான பட்ஜெட் ஆறு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து தலைவர்களும் விவசாயிகளின் பெயரை தந்திரமாக பயன்படுத்தினர். ஆனால் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. சுதந்திர இந்தியாவில் விவசாயிகளுக்காக களத்தில் இறங்கி பணியாற்றியவர்கள் யாராவது இருக்கிறார்கள் என்றால் பிரதமர் நரேந்திர மோடி தான்.

விவசாயிகள் பெயரில் எப்போதும் அரசியல் செய்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளைப் புரிந்துகொண்டு அவர்களின் வலியைப் போக்க பாஜக உழைத்திருக்கிறது.

இவ்வாறு ஜேபி நட்டா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்