பா.ஜ.க. அல்லாத அரசு ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; தெலுங்கானா முதல்-மந்திரி பரபரப்பு பேச்சு

2024 தேர்தலில் பா.ஜ.க. அல்லாத அரசு ஆட்சிக்கு வந்தால் நாட்டில் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் வினியோகம் செய்யப்படும் என தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் பேசியுள்ளார்.

Update: 2022-09-05 14:32 GMT

நிஜாமாபாத்,



தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக வளாகம் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் மாவட்ட தலைமையகத்தின் திறப்பு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு அவற்றை தொடங்கி வைத்து உள்ளார்.

இதன்பின்பு நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு சந்திரசேகர் ராவ் பேசினார். அவர் கூட்டத்தினரை நோக்கி பேசும்போது, நான் தேசிய அரசியலில் நுழைய வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு கூட்டத்தினரிடம் இருந்து பலத்த கைதட்டல் எழுந்தது.

இதனை தொடர்ந்து பேசிய அவர், எனது தேசிய அரசியல் பயணம் நிஜாமாபாத்தில் இருந்தே தொடங்கும். முக்கிய துறைகளை வளர்க்க மத்திய அரசு தவறி விட்டது. விவசாயிகளை பலவீனப்படுத்த ஆபத்து நிறைந்த சதிதிட்டம் ஒன்று தீட்டப்பட்டு உள்ளது. விவசாயிகளின் நிலங்களை, பிரதமர் மோடியுடன் கூட்டாக உள்ள கார்ப்பரேட் தொழிலதிபர்களை வாங்க செய்து, அவர்களை பலமடைய செய்ய உள்ளனர். இதற்காகவே, விவசாய பம்புசெட்டுகளில் மின் மோட்டார்களை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது.

இதுதவிர, யூரியா மற்றும் உரவிலையை உயர்த்தி விட்டது. இவை அனைத்தும் விவசாயிகளை நஷ்டத்தில் தள்ளி, கைவிடப்பட்ட சூழலில் அவர்களை கொண்டு சேர்க்கும். இந்த சூழலில் வேளாண்மையையே அவர்கள் கைவிட கூடிய கட்டாயத்திற்கு தள்ளும் என்று பேசியுள்ளார்.

அதன்பின் அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அல்லாத அரசு ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின்சார வினியோகம் செய்யப்படும் என பேசியுள்ளார்.

முதன்முறையாக பா.ஜ.க. தலைமைக்கு பெருத்த அடியாக தெலுங்கானா முதல்-மந்திரி பொது கூட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்