'பெங்களூரு குண்டுவெடிப்பை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது' - டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியின்போது நடந்தவற்றையெல்லாம் அவர்கள் மறந்துவிடக் கூடாது என டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார்.

Update: 2024-03-03 10:22 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.

இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலக வேண்டும் என மாநிலத்தின் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்வதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"குண்டுவெடிப்பு சம்பவத்தை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது. இதன்மூலம் பெங்களூருவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது என்னவெல்லாம் நடந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. கர்நாடகாவை காயப்படுத்துவது என்பது, நாட்டை காயப்படுத்துவதற்கும், தங்களை காயப்படுத்திக் கொள்வதற்கும் சமமானதாகும்."

இவ்வாறு டி.கே.சிவகுமார் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்