உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தாத காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா தர்ணா

உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தாத மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2023-07-04 18:45 GMT

பெங்களூரு:

காங்கிரஸ் மக்களுக்கு வழங்கிய 5 உத்தரவாத திட்டங்களை ஆட்சிக்கு வந்த உடனேயே நிறைவேற்றாததை கண்டித்து தர்ணா போராட்டம் பெங்களூரு மாநகர பா.ஜனதா சார்பில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடைபெற்றது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் சபாநாயகர் காகேரி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் தங்களின் கைகளில் ஏந்தி இருந்தனர். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி, எந்த நிபந்தனைகளையும் விதிக்காமல் 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக உறுதியளித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் அரசு அந்த திட்டங்களுக்கு நிபந்தனைகளை விதிக்கிறது. இதன் மூலம் காங்கிரஸ் அரசு ஓட்டு ஊழல் கட்சி அரசு என்பது நிரூபணம் ஆகியுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி 5 உத்தரவாத திட்டங்களையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.


ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே இந்த திட்டங்களை செயல்படுத்துவதாக கூறினர். ஆனால் காங்கிரஸ் அரசு அமைந்து 45 நாட்கள் ஆகியும் இந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. தேர்தலுக்கு முன்பு மத்திய அரசு அரிசி கொடுப்பதாக கூறவில்லை. அதனால் காங்கிரஸ் அரசு எங்கிருந்து அரிசி கொள்முதல் செய்கிறதோ எங்களுக்கு தெரியாது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஏழை குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு 5 கிலோ அரிசி வழங்குகிறது.

அது தவிர்த்து மாநில அரசு தலா 10 கிலோ அரிசி வழங்க வேண்டும். 5 உத்தரவாத திட்டங்களை நம்பி தான் மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நிபந்தனை விதிப்பது சரியா?. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, அரசு அமைத்த பிறகு ஒரு பேச்சு பேசுவது சரியா?. காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவது ஏன்?. இந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாவிட்டால் வரும் நாட்களில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதில் முன்னாள் மந்திரிகள் முருகேஷ் நிரானி, பி.சி.நாகேஸ், கோவிந்த் கார்ஜோள், ஈசுவரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்