கதக்கில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் பா.ஜனதா-காங்கிரஸ்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று கதக். கடந்த 1997-ம் ஆண்டு தார்வார் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கதக் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இங்கு மேற்கு சாளுக்கிய பேரரசு காலத்து பல நினைவுச்சின்னங்கள் உள்ளன. கதக்கில் ஜெயின் கோவில்களும், இந்து கோவில்களும் ஏராளமான உள்ளன.

Update: 2023-04-27 21:35 GMT

கதக் மாவட்டம்

கதக் மாவட்டத்தின் முக்கிய மொழியாக கன்னடம் உள்ளது. இங்கு 85 சதவீத மக்களால் கன்னட மொழி பேசப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக 8 சதவீத உருது பேசும் மக்களும், 3 சதவீத லம்பாடி இன மக்களும் வசிக்கிறார்கள். கதக் மாவட்டத்தில் சிரஹட்டி, கதக், ரோன், நரகுந்து ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், சிரஹட்டி, ரோன், நரகுந்து தொகுதிகளில் பா.ஜனதாவும், கதக் தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன.

கதக் மாவட்டத்தை பொறுத்தவரை பா.ஜனதா-காங்கிரஸ் கட்சிகள் தான் சமபலத்துடன் திகழ்கிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் இரு தேசிய கட்சிகள் தான் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஜனதாதளம்(எஸ்) கட்சி கதக்கில் பலவீனமாக காணப்படுகிறது. இதனால் இந்த முறையும், கதக்கில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் பா.ஜனதா-காங்கிரஸ் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

சிரஹட்டி

சிரஹட்டி சட்டசபை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராமப்பா லமானி. இந்த முறையும் அவர் தனக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று பா.ஜனதா மேலிடத்தை வற்புறுத்தி வந்தார். ஆனால் அவருக்கு டிக்கெட் வழங்க மறுத்து டாக்டரான சந்துரு லமானி என்பவருக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கி உள்ளது. அரசு டாக்டராக இருந்த இவரது ராஜினாமா ஏற்கப்படாததால், சந்துரு லமானி போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ராமப்பா லமானி டிக்கெட் பெற முயற்சி செய்து வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சந்துரு லமானியின் ராஜினாமா ஏற்பட்டதால், அவர் போட்டியிடுவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது. காங்கிரஸ் சார்பில் சுஜாதா தொட்டமணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் ஹனுமந்தப்பா நாயக் போட்டியிடுகிறார்.

கதக்-ரோன்

கதக் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எச்.கே.பட்டீல். காங்கிரசை சேர்ந்த இவர், சித்தராமையா மந்திரிசபையில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாக பணியாற்றினார். முன்னாள் மந்திரியான இவரே, காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜனதா சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த அனில் மெனசினகாய்க்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி, வெங்கன்கவுடா கோவிந்தகவுடா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

ரோன் தொகுதி பா.ஜனதா வசம் உள்ளது. இங்கு தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள கலகப்பா பண்டியே மீண்டும் பா.ஜனதா சார்பில் களம் இறங்குகிறார். காங்கிரஸ் சார்பில் ஜி.எஸ்.பட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி முக்தம் சாப் முதோல் என்பவரை களம் இறக்கி உள்ளது.

நரகுந்து

நரகுந்து தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சி.சி.பட்டீல். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் மந்திரி சபையில் பொதுப்பணித்துறை மந்திரியாக இருக்கும் இவரே, நரகுந்து தொகுதியில் மீண்டும் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி கடந்த முறை சி.சி.பட்டீலிடம் வெற்றி வாய்ப்பை இழந்த பி.ஆர்.யவகலுக்கு மீண்டுமொரு வாய்ப்பை வழங்கி உள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ருத்ரகவுடா நிங்கனகவுடா பட்டீல் என்பவர் களம் காண்கிறார்.

கதக் மாவட்டத்தை பா.ஜனதா-காங்கிரஸ் கட்சிகள் கைப்பற்ற முனைப்பு காட்டி வந்தாலும், தேசிய கட்சிகளுக்கு சாவல் அளிக்க ஜனதாதளம்(எஸ்) கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது.

இதனால் அங்கு யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதை பொறுத் திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த தேர்தலில் வெற்றி-தோல்வி நிலவரம்

தொகுதி வெற்றி தோல்வி

சிரஹட்டி ராமப்பா லமானி(பா.ஜ.க.) 91,967 தொட்டமணி ராமகிருஷ்ணா(காங்.) 61,974

கதக் எச்.கே.பட்டீல்(காங்.) 77,699 அனில் மெனசினகாய்(பா.ஜ.க.) 75,831

ரோன் கலகப்பா பண்டி(பா.ஜ.க.) 83,735 குருபதகவுடா பட்டீல்(காங்.) 76,401

நரகுந்து சி.சி.பட்டீல்(பா.ஜ.க.) 73,045 பி.ஆர்.யவகல்(காங்.) 65,066

Tags:    

மேலும் செய்திகள்