மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரை நடத்துகிறது- யூ.டி.காதர் எம்.எல்.ஏ. தாக்கு

மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரை நடத்துகிறது என்று யூ.டி.காதர் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

Update: 2022-11-09 18:45 GMT

மங்களூரு: மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரை நடத்துகிறது என்று யூ.டி.காதர் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

யூ.டி.காதர் எம்.எல்.ஏ. பேட்டி

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான யூ.டி.காதர் மங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்தலின் போது பா.ஜனதா பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. ஆனால் தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஊழல் போன்ற பெரும் நெருக்கடியான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரை நடத்தி வருகிறது. பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரை அல்ல, ஜனசங்கட யாத்திரை. கர்நாடகத்தில் பா.ஜனதா பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை. 'ஆபரேஷன் தாமரை' நடத்தி ஆட்சியை பிடித்துள்ளனர். இரட்டை எஞ்சின் ஆட்சி என்று கூறிவிட்டு தற்போது பா.ஜனதா அமைதி நிலையில் உள்ளது.

மீனவர்களுக்கு துரோகம்

எனது தொகுதியில் முக்கிய சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. ஆனால் சாலை பள்ளங்களை சீரமைக்க பா.ஜனதா அரசு ரூ.5 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. தட்சிண கன்னடாவுக்கு பாஜக அரசு என்ன செய்தது? சாகர்மாலா திட்டம் அறிவிக்கப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. கடலோர மாவட்டங்களில் மீனவர்களுக்கு பா.ஜனதா அரசு துரோகம் இழைத்துவிட்டது. மீனவர்களின் அப்பாவித்தனத்தை அரசியல் ஆதாயங்களுக்காக பா.ஜனதா பயன்படுத்தி கொண்டுள்ளனர். ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு இலவச சுகாதார அட்டை திட்டத்தை அமல்படுத்தவில்லை. மேலும் மக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் கார்டு கிடைப்பதில்லை. கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளியின் கருத்து அவருடைய தனிப்பட்டது.

மங்களூரு புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் மாட்டிறைச்சி கடைகள் அனுமதிக்க மறுப்பதில் அரசியல் உள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்ய மாநிலத்தில் 11 தொழிற்சாலைகளை அரசு அனுமதித்தது ஏன்?, அதை தடை செய்யாதது ஏன்?.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது அவருடன் ஹரிஷ்குமார் எம்.எல்.சி., காங்கிரஸ் தலைவர்கள் நிரஜ்பால், பிரகாஷ் சாலியன் உள்பட பலர் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்