மேற்கு வங்காளத்தில் காவல்துறையை கண்டித்து நாளை பந்த்: பா.ஜ.க. அழைப்பு

மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் சுவெந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்திருந்தார்.;

Update: 2024-08-27 11:16 GMT

மேற்கு வங்காளகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டரின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், முதல் - மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தியும் மாணவர் அமைப்பினர் இன்று தலைமைச் செயலகம் நோக்கி அனுமதியின்றி பேரணி நடத்தினர். பல்வேறு இடங்களில் இருந்து புறப்பட்டு சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டு, வன்முறை வெடித்தது. போராடிய மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போராட்டம் நடத்தியவர்களிடம் காவல்துறை கடுமையாக நடந்துகொண்டதை ஆரம்பம் முதலே பா.ஜ.க. கண்டித்தது. நாளை மாநிலத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் சுவெந்து அதிகாரி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் கொல்கத்தா பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை சம்பவத்தில் நீதி கேட்டும், போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்தும், நாளை (ஆகஸ்டு 28) மாநிலம் முழுவதும் 12 மணி நேரம் முழு அடைப்பு போராட்டம் நடத்த பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இப்போராட்டம் நடைபெறும் என கூறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்