பஞ்சாப் அரசை கவிழ்க்க 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா தலா ரூ.25 கோடி பேரம் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பஞ்சாப் அரசை கவிழ்க்க 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா தலா ரூ.25 கோடி பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2022-09-13 21:30 GMT

சண்டிகார், 

பஞ்சாப் மாநிலத்தில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்று வருவதாக அம்மாநில நிதி மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஹர்பால்சிங் சீமா நேற்று குற்றம் சாட்டினார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்தவுடன் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பா.ஜனதா ஏற்பாடு செய்த சிலர், 7 முதல் 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

கட்சி மாறி வந்தால், தலா ரூ.25 கோடி தருவதாகவும், பா.ஜனதா ஆட்சி அமைத்தால் மந்திரி பதவி அளிப்பதாகவும் பேரம் பேசினர். தங்களுடன் கூடுதலாக எம்.எல்.ஏ.க்களை அழைத்து வந்தால், இன்னும் அதிக பணம் அளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

டெல்லியில், பெரிய தலைவர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக, எம்.எல்.ஏ.க்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நேரம் வரும்போது இதற்கான ஆதாரத்தை வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்