அமித்ஷா பற்றி பா.ஜ.க. எம்.எல்.சி. சர்ச்சை கருத்து

ரவுடியுடன் ஒப்பிட்டு அமித்ஷா பற்றி பா.ஜ.க. எம்.எல்.சி. பேசிய ஆடியோ உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-01-14 20:02 GMT

பெங்களூரு:-

சி.பி.யோகேஷ்வர் பேசும் ஆடியோ

பா.ஜனதா முன்னாள் மந்திரியும், எம்.எல்.சி.யாகவும் இருந்து வருபவர் சி.பி.யோகேஷ்வர். இவர், கர்நாடக அரசியல் மற்றும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குறித்தும், சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி குறித்தும் பேசும் ஆடியோ உரையாடல் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த ஆடியோவில் சி.பி.யோகேஷ்வர் பேசி இருப்பதாவது:-

மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி முக்கியமான 20 தொகுதிகளில் தோல்வி அடைவது உறுதி. மண்டியாவில் சா.ரா.மகேஷ் தோல்வி அடைவார். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார். ராமநகரில் உள்ள 3 தொகுதிகளில் ஒன்றில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தோல்வி அடையும்.

'ஆபரேஷன் தாமரை'

என்னுடைய கணிப்புப்படி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்களின் ஆசிர்வாதம் கிடைக்க போவதில்லை. மக்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சிக்கு வர முடியாது. ஆனாலும் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும். மாங்காயை மரத்திலேயே பழமாக்கவும் முடியும், மரத்தில் இருந்து பறித்த பிறகு கெமிக்கல் மூலமாக பழக்க வைக்கவும் முடியும். இந்த இரண்டுக்கும் பா.ஜனதா தயாராக இருக்கிறது.

காங்கிரசில் சித்தராமையாவை விட்டால், வேறு தலைவர்கள் இல்லை. மைசூருவில் 4 காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜனதாவுக்கு வருவதால், அங்கு நமக்கு கூடுதல் தொகுதிகளில் வெற்றி

கிடைக்கும். தேர்தலுக்கு பின்பு 'ஆபரேஷன் தாமரை' நடைபெறாது. தேர்தலுக்கு முன்பாகவே 'ஆபரேஷன் தாமரை' நடைபெறும். நான் குமாரசாமியை எதிர்த்து போட்டியிடுகிறேன். அதுபோல், மந்திரிகள் அசோக், அஸ்வத் நாராயண் ராமநகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியாக வேண்டும்.

அமித்ஷா என்றாலே...

எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க கூடாது, பிற கட்சிகளுடன் உள்ஒப்பந்தம் செய்து கொண்டு தேர்தலை சந்திக்க கூடாது என்று அமித்ஷா கூறி இருக்கிறார். அமித்ஷா என்றாலே ரவுடிசம் தான். கட்சிக்கு எதிராக யாராவது பேசி விட்டால், அவ்வளவு தான். கட்சிக்கு எதிராக பேசுபவர்களின் கதி முடிந்து விடும். ஒட்டுமொத்தத்தில் என்ன தான் நடந்தாலும், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய போகிறது.

இவ்வாறு சி.பி.யோகேஷ்வர் பேசிய ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆடியோ உரையாடல் பா.ஜனதா கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்