பா.ஜ.க. தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டம் - முக்கிய நிர்வாகிகள் கைது

கடந்த வாரம் நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க. முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2024-02-02 05:45 GMT

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5-வது முறையாக இன்று ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்மன் டெல்லியில் உள்ள ஆட்சியை கவிழ்ப்பதற்காக பா.ஜ.க.வின் சதித்திட்டம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க. முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், பா.ஜ.க.வை கண்டித்து டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . சிங்கு எல்லையில் இருந்து இதுவரை 25 ஆம் ஆத்மி கட்சியினரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பஞ்சாப் மற்றும் அரியானாவை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இன்று கட்சியின் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்