பீகார்: 9 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்த அவலம்
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னால், பாலங்கள் அடுத்தடுத்து, இடிந்து விழுகிற சம்பவங்கள் ஏன் நடக்கின்றன? என மத்திய மந்திரி ஜிதன் ராம் மஞ்சி கேள்வி எழுப்பியுள்ளார்.;
பாட்னா,
பீகாரில் முதல்-மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து, 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்து உள்ளது.
இந்த கூட்டணிக்கு நிதீஷ் குமார் தலைமையிலான கட்சி ஆதரவை வழங்கி உள்ளது. இதனால், பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் பீகாரில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் அடுத்தடுத்து, இடிந்து விழுந்த சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.
இதன்படி, கடந்த 9 நாட்களில் அராரியா, சிவான், கிழக்கு சம்பரான், கிஷன்கஞ்ச் மற்றும் மதுபானி ஆகிய 5 மாவட்டங்களில் பாலங்கள் இடிந்து விழுந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளன. கடந்த வெள்ளியன்று, பீகாரின் மதுபானி பகுதியில் 75 மீட்டர் நீளம் கொண்ட பாலம் இடிந்து விழுந்தது.
இதுபற்றி மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மந்திரி ஜிதன் ராம் மஞ்சி கயாவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுகின்றன. இதில் சதி திட்டம் இருக்கும் என நான் காண்கிறேன். ஏன் மக்களவை தேர்தலுக்கு பின்னால், பாலங்கள் அடுத்தடுத்து, இடிந்து விழுந்த சம்பவங்கள் நடக்கின்றன? என ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பினார்.
இது போன்ற சம்பவங்கள் 15 அல்லது 30 நாட்களுக்கு முன் ஏன் நடைபெறவில்லை? பீகார் மாநில அரசுக்கு அவதூறு ஏற்படுத்த ஏதேனும் சதி திட்டம் இருக்கிறதா? என்று அவர் கேட்டுள்ளார். ஒப்பந்ததாரர்கள் அல்லது பொறியியலாளர்கள் என தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.