ராகுல் காந்தியின் பாதயாத்திரை கூட்டத்தில் புகுந்த பிக்பாக்கெட்டுகள்! போலீசார் எச்சரிக்கை

காங்கிரசார் பாதயாத்திரை சென்ற பகுதிகளில் பிக்பாக்கெட் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-09-13 08:56 GMT

திருவனந்தபுரம்,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.அன்று முதல் 10-ந் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் 54 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார். அதன்பின்பு 11-ந் தேதி முதல் அவர் கேரள மாநிலத்தில் நடைபயணம் தொடங்கினார்.

கேரளாவில் இன்று 3-வது நாளாக அவரது நடைபயணம் நடக்கிறது. திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம், கனியபுரம் பகுதியில் இன்று காலை 7.15 மணிக்கு நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி வழி நெடுக கூடி நின்ற மக்களை பார்த்து கையசைத்தபடி உற்சாகமாக நடந்தார்.

இந்த பாதயாத்திரையில் பங்கேற்கவும், ராகுலை வரவேற்கவும் இன்று ஏராளமான மக்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்றனர்.

இந்த நிலையில், காங்கிரசார் பாதயாத்திரை சென்ற பகுதிகளில் பிக்பாக்கெட் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக திருவனந்தபுரம் கரமன காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,

குற்றங்கள் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளில் இருந்து, நான்கு பேர் கொண்ட கும்பல் அடையாளம் காணப்பட்டது. அவர்கள் யாத்திரையில் பங்கேற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

ஆனால் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா அல்லது பிக்பாக்கெட் சம்பவங்களுக்குப் பின்னால் இருந்தார்களா என்பது தெரியவில்லை.

இது போன்று பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடும் போது, பிக்பாக்கெட்டுகள் வருவது உறுதி. ஆகவே நிலைமையை கண்காணிக்க சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்