பி.ஜி.எம்.எல். பள்ளியில் குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் ஆய்வு
கோலார் தங்கவயல் உரிகம் பகுதியில் உள்ள பி.ஜி.எம்.எல். பள்ளியில் குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.;
கோலார் தங்கவயல்
ஆசிரியர்கள் பற்றாக்குறை
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் உரிகம் பகுதியில் பி.ஜி.எம்.எல். பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சு தலைமையில் அதிகாரிகள் நேற்று பி.ஜி.எம்.எல். பள்ளிக்கு வந்தனர். அவர்கள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பி.ஜி.எம்.எல். தொடக்கப்பள்ளியில் 114 மாணவர்களுக்கு ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தி வந்ததும், அங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்ததும் தெரியவந்தது.
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் சரியான முறையில் கல்வி கற்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருந்ததும் தெரிந்தது.
ஆக்கப்பூர்வமான நடவடிக்கை
அதுமட்டுமின்றி குழந்தைகளின் மீறப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. பள்ளியின் நிர்வாகத்திலும், ஆசிரியர்கள் இடமாற்றத்திலும் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தலையிடாமல், குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க அங்கிருந்தவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
பின்னர் குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
பி.ஜி.எம்.எல். தொடக்க பள்ளியில் 114 மாணவர்களுக்கு ஒரேயொரு ஆசிரியர் தான் உள்ளார். இதனால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளேன்.
இந்த பள்ளி தொடங்கப்பட்டு 130 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இங்கு தற்போது ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரேயொரு ஆசிரியரால் அனைத்து மாணவர்களுக்கும் பாடம் நடத்த முடியுமா?.
அரசு உதவிபெறும் பள்ளியாக இருக்கும் பட்சத்தில் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வித்திறனில் தேய்மானம் ஏற்பட்டு விட கூடாது.
மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் இதுபற்றி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
7 பள்ளிகள் மூடல்
பி.ஜி.எம்.எல். நிறுவனத்தால் 8 தொடக்கப்பள்ளிகளும், ஒரு உயர்நிலைப்பள்ளியும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2001-ம் ஆண்டு பி.ஜி.எம்.எல். நிறுவனம் மூடப்பட்டதும், அந்த நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த 7 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன.
தற்போது ஒரேயொரு தொடக்கப்பள்ளியும், உயர்நிலைப்பள்ளியும் மட்டும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.