பெங்களூரு பயங்கரவாதிகள் வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும்- பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
பெங்களூருவில் பயங்கரவாதிகள் கைதான வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:-
முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
பெங்களூருவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. நகரில் தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. போலீஸ் நிலையங்களில் இன்னும் பல புகார்கள் குறித்து வழக்கு பதிவு செய்யப்படவில்லை. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அவசியம். காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்துவிட்டது.
இதற்கு அரசு அவகாசம் ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது. பெங்களூருவில் கிளப் நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன. மாமூல் வசூல் தீவிரமாக நடந்து வருகிறது. வெளியூர்காரர்கள் இங்கு வந்து குடியேறி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறது.
என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும்
இந்த வழக்கை உடனே என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும்.பெங்களூருவின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் களத்தில் இறங்க வேண்டும். அந்த பயங்கரவாதிகளுக்கு சர்வதேச அமைப்புகளின் ஆதரவு உள்ளது. பெங்களூருவில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்த சதி நடக்கிறது. அதனால் இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.