8 நாட்களாக நடைபெற்று வந்த பெங்களூரு தமிழ் புத்தக திருவிழா நிறைவடைந்தது
பெங்களூருவில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த தமிழ் புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. 10 ஆயிரம் பேர் புத்தக திருவிழாவுக்கு வருகை வந்தனர்.;
பெங்களூரு:
ஆளுமை விருதுகள்
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் ஆகியவை சார்பில் தமிழ் புத்தக திருவிழா தொடக்க விழா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி பெங்களூரு அல்சூரில் உள்ள தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இந்த புத்தக திருவிழாவின் 8-வது மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் கலந்து கொண்டார். இதில் அவர், தமிழ் இலக்கிய ஆளுமை விருதுகளை தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கி கவுரவித்தார். அதைத்தொடர்ந்து பாலச்சந்திரன் பேசியதாவது:-
விமர்சனங்கள் காரணம்
நமது தமிழ் சமுதாயம் இல்லாத பெருமைகளை பேசுவதும், இருக்கின்ற பெருமைகளை பேசாமல் இருப்பதும் என்ற சூழ்நிலையில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புனை கதைகளை நாம் வரலாறாக நம்புவது மிகவும் வருத்தத்திற்குரியது.
ஆங்கில இலக்கியம் உலக அளவில் சிறந்து விளங்குவதற்கு, அவற்றின் மீது எழும் விமர்சனங்களே காரணம். ஆனால் தமிழ் இலக்கியங்கள் மீது அத்தகைய விமர்சனங்கள் எழுந்தது இல்லை.
கன்னட புத்தகம் வெளியீடு
இன்று வரை கிடைத்த ஆய்வு தகவல்களின்படி இந்தியாவில் தமிழ் தான் வரி வடிவம் பெற்ற முதல் மொழி. ஆதிச்சநல்லூரில் கல்லறை அதாவது சுடுகாடு உள்ளது. அங்கு தோண்டி பார்த்ததில் பல்வேறு இனக்குழுக்களின் எலும்பு கூடுகளுடன் எழுது கோல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்வது பற்றி யாருமே பேசவில்லை.
இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.
விழாவில் தமிழ் புத்தக திருவிழா குழு தலைவர் வணங்காமுடி, செயலாளர் தனஞ்செயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ஒரு கன்னட புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் கன்னட வளர்ச்சி ஆணைய முன்னாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். 8 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக திருவிழாவுக்கு சுமாா் 10 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.