10 ஆண்டுகள் ...! 15 பெண்கள்...! போலி டாக்டர்...! சினிமா பாணியில் மோசடி செய்த 'கல்யாண மன்னன்'

ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடும் பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.;

Update: 2023-07-10 07:59 GMT

பெங்களூரு

தமிழில் 'நான் அவன் இல்லை' என்ற ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதில் ஜீவன் கதாநாயகனாக நடித்திருப்பார். அவர் அந்த படத்தில் பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள், பணத்தை அபேஸ் செய்து கொண்டு ஓடும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் அதுபோன்ற உண்மையான சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்துள்ளது.

இங்கு ஒரு வாலிபர் தான் டாக்டர், என்ஜினீயர், அரசு ஒப்பந்ததாரர் என்று பொய் சொல்லி 15 பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை அபேஸ் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

மேட்ரிமோனி இணையதளம் வாயிலாக கடந்த 9 ஆண்டுகளாக ஒருவர் 15க்கும் மேற்பட்ட பெண்களை சந்தித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெங்களூரு பன்னஷங்கரி என்ற இடத்தில் வசிக்கக்கூடிய மகேஷ் கேபி. நாயக் என்ற 34 வயது நபர் 2014ம் ஆண்டில் துவங்கி இன்று வரை 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதில் அவர்களுக்கு 4 குழந்தைகளும் கூட உள்ளதாம்.

தன்னை ஒரு இன்ஜினீயர் என்றும் மருத்துவர் என்றும் திருமண பொறுத்த இணையதளங்களில் ஐடி உருவாக்கி வைத்து கொண்டு 15க்கும் மேற்பட்ட பெண்களை அந்த இணையதளம் வாயிலாகவே சந்தித்து திருமணம் செய்துள்ளார் இந்த நபர். அவர் மருத்துவர் என்று அனைவரையும் நம்ப வைப்பதற்காக தும்கூர் பகுதியில் போலி கிளினிக் ஒன்றையும் கூட நடத்தி வந்துள்ளார்.

திருமணம் செய்யும் பெண்கள் அனைவரையும் பொருளாதார ரீதியாக வளமாக உள்ளவர்களாக பார்த்து தேர்வு செய்யும் மகேஷ், அவர்களை ஏமாற்றி பல லட்சக்கணக்கான பணங்களையும் வாங்கியுள்ளார். ஒருவரிடம் தன்னுடைய தேவைகள் முடிந்தவுடன் வேறு ஒரு நகரில் புதிய பெண்ணை பார்த்து ஏமாற்றி திருமணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இதுவரை 15 பெண்களை இவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் இருவர் மட்டுமே தற்போது புகார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். மேலும் இவர் ஆன்லைன் திருமணம் தகவல் மையம் மூலம் வரன் தேடி வந்தார். இந்த நிலையில் இவர் மைசூரு(மாவட்டம்) டவுன் லிங்கம்புடி பாளையா பகுதியில் குடும்பத்துடன் குடியேறினார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் மகேஷ் என்பவர் ஹேமலதாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் ஒரு டாக்டர் என்றும் மகேஷ் கூறியுள்ளார். மேலும் ஹேமலதாவை பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார். அதையடுத்து ஹேமலதாவும், மகேசும் நேரில் சந்தித்து பேசினர். பின்னர் ஹேமலதாவின் குடும்பத்தினர் முன்னிலையில் மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வைத்து எளிதான முறையில் அவர்களது திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி நடந்தது.

திருமணம் முடிந்ததும் மகேசும், ஹேமலதாவும் மைசூரு டவுனில் ஒரு வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தினர். திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து அதாவது பிப்ரவரி மாதம் 5-ந் தேதி அன்று ஹேமலதாவிடம் மகேஷ் ரூ.70 லட்சம் கேட்டார். அதாவது தான் மைசூரு விஜயநகரில் சொந்தமாக ஒரு கிளினிக் திறக்க இருப்பதாகவும், அதற்காக ரூ.70 லட்சம் தேவைப்படுவதாகவும் ஹேமலதாவிடம் கூறினார்.

அப்போது ஹேமலதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியிருக்கிறார். அதையடுத்து ஹேமலதாவிடம் கடன் ஏற்பாடு செய்து தரும்படி மகேஷ் கேட்டிருக்கிறார். அதுவும் முடியாது என்று கூறியதால் ஹேமலதாவிடம் ரூ.70 லட்சம் கேட்டு மகேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பயந்துபோன ஹேமலதா இப்பிரச்சினை குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து மகேஷ் வீட்டில் இருந்த ரூ.15 லட்சம் ரொக்கம், ஹேமலதாவின் 200 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றை அபேஸ் செய்து கொண்டு அங்கிருந்து தப்பி விட்டார்.

ஆனால் ஹேமலதா தனது கணவர் எப்படியும் திரும்பி வந்துவிடுவார் என்று கருதி அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் ஒருசில மாதங்கள் கழித்து ஹேமலதாவை சந்திக்க திவ்யா என்ற பெண் வந்தார். அப்போது அவர், தன்னையும் மகேஷ் இவ்வாறு திருமணம் செய்து ஏமாற்றி நகைகள் மற்றும் பணத்தை அபேஸ் செய்து சென்றுவிட்டதை தெரிவித்தார்.

இதனால் உஷாரான ஹேமலதா இதுபற்றி மைசூரு குவெம்பு நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மகேஷ் தற்போது துமகூரு(மாவட்டம்) டவுன் மகரிஷி வால்மீகி சர்க்கிள் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை மைசூருவுக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது 35 வயதான மகேஷ், பெங்களூரு பனசங்கரி காளிதாசா நகரை சேர்ந்தவர் ஆவார். இவர் ஆன்லைன் திருமண தகவல் மூலம் திருமணத்திற்கு வரன் தேடும் விதவைகள் மற்றும் முதிர்க்கன்னிகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். முதலில் அவர்களிடம் செல்போன் மூலம் நைசாக பேசும் மகேஷ், தான் ஒரு டாக்டர், என்ஜினீயர், அரசு ஒப்பந்ததாரர் என்று இடத்திற்கு தகுந்தவாறு பொய் சொல்லி இருக்கிறார்.

பின்னர் அவர்களை நம்ப வைக்கும் வகையில் டிப்-டாப்பாகவும், பண பலம் படைத்தவன் போன்றும் வலம் வந்திருக்கிறார். நேரில் சந்தித்த பின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளும் பெண்களிடம் தனக்கு யாரும் இல்லை, தான் ஒரு அனாதை என்று கூறியிருக்கிறார்.

திருமணம் முடிந்த கையோடு அந்த பெண்களுடன் சில நாட்கள் தனிக்குடித்தனம் நடத்தும் மகேஷ், அவர்களிடம் இருந்து பல்வேறு காரணங்களை கூறி நகைகள், பணம் ஆகியவற்றை அபேஸ் செய்து கொண்டு ஓடிவிடுவதை தொழிலாக செய்து வந்திருக்கிறார். இவ்வாறு ஹேமலதா, திவ்யாவுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 15 பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை, பணத்தை மகேஷ் மோசடி செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தான் திருமணம் செய்து கொள்ளும் பெண்களிடம், 'எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் நான் செல்போனை அடிக்கடி எடுத்து பேச மாட்டேன்.

மேலும் என் மீது நில விவகாரம் தொடர்பாக போலீசில் வழக்கு உள்ளது. அதனால் என்னைப்பற்றி போலீசாரிடம் சொல்ல வேண்டாம். அவ்வாறு சொன்னால் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள்' என்று கூறி ஏமாற்றி இருக்கிறார்.

கைதாகும்போது மகேசிடம் இருந்து போலீசார் ரூ.2 லட்சம் ரொக்கம், 2 கார்கள், ஒரு கை செயின், ஒரு மோதிரம், 2 தங்க வளையல்கள், ஒரு நெக்லஸ், 7 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைதான மகேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்களும் நேரில் வந்து புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு பெண்ணை திருமணம் செய்தவுடன், ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் இருந்து தன்னுடைய தகவலை மகேஷ் அழித்துவிடுவார்.

பின்னர் அடுத்த பெண்ணை திருமணம் செய்வதற்காக மகேஷ் வெவ்வேறு விதமான தகவல்களையும், பல்வேறு ஆன்லைன் திருமண தகவல் மையங்களிலும் பதிவிட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடும் பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்