பெங்களூரு ரெயில் நிலையத்தில் மேற்கு வங்க பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிக்கெட் பரிசோதகர் கைது
பெங்களூரு ரெயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிக்கெட் பரிசோதகரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.;
பெங்களூரு,
மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண், வேலை காரணமாக பெங்களூருவுக்கு வந்தார். அவர் கடந்த 13-ந் தேதி ஹவுரா-எஸ்.எம்.வி.டி. விரைவு ரெயிலில் பயணித்தார். மறுநாள் காலையில் அந்த ரெயில் கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்தில், சிக்னல் காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து புறப்பட இளம்பெண் முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் தனது உடைமைகளை எடுத்து கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் நடந்து சென்றார். அப்போது டிக்கெட் பரிசோதகர் சந்தோஷ் குமார்(வயது 42), இளம்பெண்ணிடம் டிக்கெட்டை காண்பிக்குமாறு கேட்டார். இளம்பெண்ணும் தனது செல்போனில் இருந்த டிக்கெட் காண்பித்தார்.
அப்போது டிக்கெட் பரிசோதகர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணை தள்ளிவிட்டு, அவரது முகத்தில் பேனாவால் எழுத முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், கத்தி கூச்சலிட்டார். அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் டிக்கெட் பரிசோதகரை பிடித்தனர். மேலும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் டிக்கெட் பரிசோதகரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மது அருந்தி இருந்ததும், இளம்பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதற்கிடையே இளம்பெண், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.