மழைநீரில் சிக்கி இளம்பெண் சாவு எதிரொலி-41 சுரங்க சாலை தொடர்பான ஆய்வறிக்கை தயார்; மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
மழைநீரில் சிக்கி இளம்பெண் இறந்ததன் எதிரொலியாக 41 சுரங்க சாலை தொடர்பான ஆய்வறிக்கை தயாராக இருப்பதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் கூறினார்.
பெங்களூரு:
மழைநீரில் சிக்கி இளம்பெண் இறந்ததன் எதிரொலியாக 41 சுரங்க சாலை தொடர்பான ஆய்வறிக்கை தயாராக இருப்பதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் கூறினார்.
கனமழை
பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த கனமழையின்போது, கே.ஆர். சர்க்கிள் சாலையில் உள்ள சுரங்க சாலையில் மழைநீர் தேங்கியது. அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் தேங்கிய நீரில் சிக்கினர். இதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் சாவுக்கு, மாநகராட்சியின் அலட்சியம் தான் காரணம் என குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள முக்கிய 53 சுரங்க சாலைகளில் அதிகாரிகள் ஆய்வை தொடங்கினர். தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் தற்போது வரை சுமார் 41 சுரங்க சாலைகளில் ஆய்வுப்பணிகள் நிறைவடைந்து விட்டதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறி உள்ளார்.
தனியார் வசம்...
இதுகுறித்து அவர் கூறுகையில், 'பெங்களூருவில் உள்ள சுரங்க சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி தற்போது 41 சுரங்க சாலைகளில் ஆய்வு முடிந்துவிட்டது. அதுதொடர்பான தகவல்கள் விரைவில் இணையத்தில் பதிவேற்றப்படும். இதில் இளம்பெண் உயிரிழந்த கே.ஆர். சர்க்கிள் சுரங்க சாலையும் அடங்கும்.
மீதமுள்ள சுரங்க சாலைகளில் விரைவில் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்படும்' என கூறினார். பெங்களூருவில் உள்ள சில சுரங்க சாலைகள் தனியார் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக குவெம்பு சர்க்கிள், மேக்ரி சர்க்கிள் மற்றும் சி.என்.ஆர். சாலை ஆகிய சுரங்க சாலைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.