கசங்கிய சட்டை.. பட்டன் போடவில்லை.. பெங்களூரு மெட்ரோ ரெயிலில் தொழிலாளிக்கு அனுமதி மறுப்பு

தடுத்து நிறுத்தப்பட்ட தொழிலாளியின் புகைப்படத்தை பகிர்ந்த ஒருவர், நம்ம மெட்ரோ எப்போது இப்படி ஆனது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-04-10 11:21 GMT

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு நபர் தனது சட்டை பட்டன்களை மாட்டாமல் வந்ததால் மெட்ரோ ரெயிலில் ஏற விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. தொட்டகல்லாசந்திரா மெட்ரோ நிலையத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த நபர் கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையில், சில பட்டன்கள் இல்லாததால் பட்டன் போடவில்லை. அவரது வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்த மெட்ரோ அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்து வரவேண்டும் என்றும், இல்லையெனில் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டோம் என்றும் அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது.

அப்போது சக பயணிகள் தலையிட்டு விசாரித்துள்ளனர். பயணிகளில் ஒருவர் இந்த சம்பவத்தை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

"ஆடை தொடர்பான மேலும் ஒரு சம்பவம் இப்போது என் கண் முன்னால் நடந்தது. ஒரு தொழிலாளி தடுத்து நிறுத்தப்பட்டு அவரது சட்டையின் மேற்பகுதியில் இரண்டு பட்டன்களை தைக்கும்படி கூறினார்கள். நம்ம மெட்ரோ எப்போது இப்படி ஆனது?" என அந்த பயணி பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் செயலை விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அனைத்து பயணிகளையும் சமமாக நடத்துவதாக மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, விவசாயி ஒருவரை ரெயிலில் ஏற அனுமதிக்காத பெங்களூரு மெட்ரோ ரெயில் ஊழியருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, பாதுகாப்பு ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த விவசாயி கிழிந்த ஆடைகளை அணிந்து, தலையில் ஒரு பையை சுமந்து வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்