பெங்களூரு-கோவை வந்தே பாரத் ரெயில் இன்று முதல் இயக்கம்
கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
பெங்களூரு,
அதிவேக ரெயில் சேவையான வந்தே பாரத் ரெயில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தை பொறுத்தவரை சென்னை-பெங்களூரு-மைசூரு வந்தே பாரத், பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத், பெங்களூரு-காச்சிகுடா வந்தே பாரத் ஆகிய 3 ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் பெங்களூரு-கோவை மற்றும் மங்களூரு-கோவா இடையிலான வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் வருகிற 3-ந்தேதி முதல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை-பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 20642) காலை 5 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பகல் 11.30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். மறுமார்க்கமாக பெங்களூரு கன்டோன்மென்ட்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20641) மதியம் 1.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவையை சென்றடையும்.
இந்த வந்தே பாரத் ரெயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயங்கும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) டிக்கெட் விற்று தீர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு (வெயிட்டிங் லிஸ்ட்) சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.