பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை பணி நிலம் கையகப்படுத்த கோலார் விவசாயிகள் குறுக்கீடு
பெங்களூரு-சென்னை இடையேயான விரைவுச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்த கோலார் விவசாயிகள் குறுக்கீடு செய்வதாகவும், அதனால் குறைகளை உடனே சரிசெய்யும்படியும் அதிகாரிகளுக்கு மந்திரி பைரதி சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:-
நிலம் கையகப்படுத்தவில்லை
பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி சுரேஷ் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கர்நாடக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மந்திரி பைரதி சுரேஷ் பேசியதாவது:-
பெங்களூரு-சென்னை இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை கோலார் மாவட்டம் வழியாக செல்கிறது. ஆனால் அந்த பகுதிகளில் பணிகள் இன்னும் முழுவீச்சில் நடைபெறவில்லை. அந்த பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அங்கு சில பகுதிகளில் இன்னும் நிலம் கையகப்படுத்தவில்லை. இதனால் சாலை பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விரைவாக முடிக்க வேண்டும்
கோலார் பகுதியில் நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் குறுக்கீடு செய்கிறார்கள். அங்கு நிலங்களை கையகப்படுத்த கோலார் மாவட்ட போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த விரைவுச்சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பணிகளில் ஏதாவது குறைகள் இருந்தால் அதை உடனே சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு பைரதி சுரேஷ் பேசினார்.
பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை ஒசக்கோட்டை அருகே உள்ள குளத்தூர் கிராமத்தில் தொடங்கி சென்னை அருகே உள்ள திருபெரும்புதூரில் நிறைவடைகிறது. இதன் நீளம் 285 கி.மீ.(கிலோ மீட்டர்). இந்த சாலை கர்நாடகத்தில் 77.23 கிலோ மீட்டரும், ஆந்திராவில் 91 கிலோ மீட்டரும், தமிழ்நாட்டில் 116.60 கிலோ மீட்டரும் அமைகிறது. இந்த சாலை திட்ட செலவு ரூ.40 ஆயிரம் கோடி ஆகும். இதற்கு மத்திய அரசு 40 சதவீதம், அரசு-தனியார் பங்களிப்பில் 60 சதவீதமும் நிதி திரட்டப்பட்டுள்ளது.