பெண் பயணியை சரமாரியாக தாக்கிய பஸ் கண்டக்டர் கைது
கர்நாடகாவில் ஏ.சி. பஸ் தவிர மற்ற பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
டிக்கெட் கேட்டும் கொடுக்காமல் தாமதம் செய்ததால் ஏற்பட்ட தகராறில் பெண் பயணியை பி.எம்.டி.சி. பஸ் கண்டக்டர் சரமாரியாக தாக்கினார். இதையடுத்து அந்த கண்டக்டர் கைது செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஏ.சி. பஸ் தவிர மற்ற பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு பீலஹள்ளியில் இருந்து சிவாஜிநகர் நோக்கி பி.எம்.டி.சி. ஏ.சி. பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சில் தஞ்ஜிலா இஸ்மாயில் என்ற பெண் ஏறினார். அவர் டிக்கெட் கொடுக்கும்படி கண்டக்டரிடம் கேட்டார். அப்போது கண்டக்டர் காத்திருக்கும்படி கூறி உள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் டைரி சர்க்கிள் அருகே பஸ் வந்தவுடன், அந்த பெண் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போதும் கண்டக்டர் சிறிது நேரம் கழித்து டிக்கெட் தருவதாக கூறி உள்ளார். இதுதொடர்பாக அந்த பெண்ணுக்கும் கண்டக்டர் ஒன்னப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென கண்டக்டர், அந்த பெண்ணை சரமாரியாக தாக்க தொடங்கினார். இதில் அந்த பெண் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பெண்ணை மீட்டனர்.
பின்னர் உடனடியாக அந்த பெண் சித்தாப்புரா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் கண்டக்டர் ஒன்னப்பாவை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கண்டக்டர் ஒன்னப்பாவை பணியிடை நீக்கம் செய்து பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பி.எம்.டி.சி. பஸ்சில் பயணித்த ஒரு பெண்ணை கண்டக்டர் தாக்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் அதுபோல் ஒரு சம்பவம் பி.எம்.டி.சி. பஸ்சில் நடந்துள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.