பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்களில் குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐ.டி.பி.எல். ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின.;

Update: 2024-03-03 01:41 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதேநேரத்தில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள், பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரமாக எடுத்து கொண்டு மற்றொரு புறம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டலில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்திற்கு சிரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை ஓட்டல் குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

ஒருபுறம் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு காரணம் யார்?, பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் ஓட்டலில் வெடிகுண்டை வைத்து விட்டு சென்ற நபரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக ஒரு தனிப்படை போலீசார் அண்டை மாநிலங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதாவது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களிலும் போலீசார் முகாமிட்டு ஓட்டலில் குண்டு வைத்த நபரை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்