வேன் மீது லாரி மோதி விபத்து- 4 தொழிலாளர்கள் பலி
விபத்து தொடர்பாக குராப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டம், கங்சாரி மோர் என்ற இடத்தில் இன்று காலையில் கட்டுமானத் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் மீது லாரி மோதியது. இதில் வேனில் இருந்த தொழிலாளர்கள் 4 பேர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினர்.
அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்டு பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 4 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து தொடர்பாக குராப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்கள் சியாபூர் பகுதியில் வசிக்கும் ஜீவன்தீப் பவுல் தாஸ் (26), மங்கள்தீப் பால் தாஸ் (32), பிஸ்வஜித் ராய் (35) மற்றும் திவாகர் சிங் (22) என்பது தெரியவந்துள்ளது.