வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள் கர்நாடகத்துக்கு பலனா? பாதிப்பா? ; தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து
கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஆதிக்கம் செலுத்தும் வடமாநில தொழிலாளர்களால் பலனா-பாதிப்பா? என்பது குறித்து தொழில்முனைவோரும், பொதுமக்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.
பெங்களூரு:
விண்ணை முட்டும் கட்டிடங்கள்
பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் தொகையும் 1 கோடியை தாண்டி உள்ளது. பெங்களூருவுக்கு வேலைத்தேடி மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வேலைத்தேடி வருபவர்களும் அதிகரித்து வருகின்றனர். பெங்களூருவில் புதிதாக தொழில் தொடங்கவும், கட்டுமான பணிகள் உள்பட பல்வேறு வேலைக்களுக்காக உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான தொழில் பிரபலமாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு நகரம், பெங்களூருவையொட்டிய பகுதிகளில் விண்ணை முட்டும் அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், பிற தனியார் நிறுவனங்களுக்காக பல அடுக்குகளை கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கட்டப்படும் கட்டிடங்களில் முன்பு ராய்ச்சூர், கலபுரகி, கதக், பல்லாரி, யாதகிரி உள்ளிட்ட வடகர்நாடக தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.
மெட்ரோவில் வடமாநில தொழிலாளர்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே பெங்களூரு மறறும் பெங்களூருவை சுற்றி இருக்கும் பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், அரசு சார்பில் நடைபெறும் வளர்ச்சி பணிகளான மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல கட்டுமான பணிகளிலும் வடமாநில தொழிலாளர்களே ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பெங்களூருவில் கடந்த 10 ஆண்டுகளுக்ககும் மேலாக நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் தான் வேலை செய்து வருகிறார்கள்.
தற்போதும் நகரில் பல பகுதிகளில் மெட்ரோ ரெயில் பாதைக்காக சுரங்க பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் வடமாநில தொழிலாளர்களே பணியாற்றி வருவதுடன், அவர்களை தவிர வேறு மாநில தொழிலாளர்கள், வடகர்நாடக தொழிலாளர்கள் வேலை செய்வதை பார்ப்பது அரிதாகி வருகிறது. அந்த அளவுக்கு வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் ஆதிக்கம்
கட்டுமான பணிகள் மட்டும் இல்லாமல் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகளிலும் வடமாநில தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர். முன்பு கட்டுமான தொழிலில் ஈடுபட தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வந்தனர். ஒரு வீட்டில் கொத்தனார் இருந்தால், அவரது குடும்பம் தலைமுறை, தலைமுறையாக கொத்தனார் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது வீட்டுக்கு ஒரு என்ஜினீயர் உருவாகி விட்டால், கடினமான வேலையாக கூறப்படும் கட்டுமான தொழிலுக்கு தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்து தொழிலாளர்கள் வருவது இல்லை என்று கட்டுமான நிறுவன அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் இருக்கும் பெரும்பாலான சலூன் கடைகளில் கூட வடமாநில தொழிலாளர்கள் தான் அதிகம் வேலை செய்கிறார்கள். உரிமையாளர்கள் மட்டுமே கன்னடர்களாக இருக்கிறார்கள். முடித்திருத்தும் பணிகளில் ஈடுபடுவது வடமாநிலத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். பெங்களூருவில் வடமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஏனெனில் பெங்களூருவில் நடக்கும் கட்டுமான பணிகளில் 90 சதவீதம் வடமாநில தொழிலாளர்களே உள்ளனர். இந்த ஆதிக்கத்திற்கு பல்வேறு காரணங்களை கட்டுமான நிறுவன அதிபர்கள், ஓட்டல் மற்றும் பிற கடைகளின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
சம்பளம் அதிகம் கேட்கிறார்கள்
அவற்றில் முக்கியமானது சம்பள பிரச்சினை ஆகும். மற்றொன்று குறிப்பிட்ட நேரம் தான் வேலை செய்வோம் என்ற தொழிலாளர்களின் வாதம் ஆகும். வடமாநில தொழிலாளர்களில் கட்டிட மேஸ்திரியாக இருந்தால், ரூ.700 முதல் ரூ.800 வரை கொடுக்கப்படுகிறது. மற்ற தொழிலாளர்கள் ரூ.400 முதல் ரூ.500 வரை பெறுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு, ஆந்திரா, வடகர்நாடக மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகரில் வசிக்கும் தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள்.
குறிப்பாக காலை 9 மணிக்கு வேலைக்கு வந்தால் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டு சென்று விடுகிறார்கள். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் காலை 8 மணிக்கே வேலைக்கு வந்து விடுகிறார்கள். மாலை 6 மணிக்கு தான் வேலையை முடிக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால் தென் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் தொழிலாளர்களை நம்பாமல் வடமாநில தொழிலாளர்களை சார்ந்திருக்க வேண்டிய இருப்பதாக உரிமையாளர்களும், கட்டுமான அதிபர்களும் தெரிவித்துள்ளனர்.
வேலைகள் பறிக்கப்படுவதாக...
இதுபோன்று பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டே செல்லலாம். அதே நேரத்தில் வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் காரணமாக கர்நாடகத்தில் வசிக்கும் தொழிலாளர்கள், தென்இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்களின் வேலைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளையும் கட்டுமான நிறுவன அதிபர்கள் மறுத்துள்ளனர்.
இங்குள்ள தொழிலாளர்கள் கடினமான வேலையை பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை என்றும், குகறிப்பிட்ட நேரம் தான் வேலை செய்வோம், அடிக்கடி விடுமுறை எடுப்பது என்பவன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுப்பதாகவும், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகளில் ஈடுபடுவதற்காக மொத்தமாக தொழிலாளர்கள் வேலைக்கு வருவதில்லை என்றும் கூறுகின்றனர்.
சலுகைகளால் வேலைக்கு வருவதில்லை
பெரும்பாலும் ரேஷன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட பல சலுகைகளை அரசுகள் வழங்குவதாலும், கடினமாக வேலைகளை பார்க்க தயாராக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ராய்ச்சூர், கலபுரகி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் வறட்சி நிலவாமல் நல்ல மழை பெய்தால், அங்கேயே விவசாய தொழில் உள்ளிட்ட வேலைகளை பார்த்துவிட்டு இருந்து விடுகிறார்கள். கட்டுமான வேலைத்தேடி அந்த மாவட்ட தொழிலாளர்கள் பெங்களூருவுக்கு வருவதில்லை.
அதே நேரத்தில் வடமாநில தொழிலாளர்கள் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவது, இங்குள்ள தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், சம்பளம் உள்ளிட்ட காரணங்களை கணக்கிட்டு பார்த்தால் கட்டுமான தொழில் நடத்துபவர்கள், ஓட்டல்கள், பிற கடைகளை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு லாபமாகவும், அனுகூலமாகவும் இருக்கிறது.
பெங்களூருவில் வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் குறித்து கட்டுமான அதிபர்கள், தொழிலாளர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
அனுகூலமாக இருக்கிறது
பெங்களூருவில் உள்ள ஆப்டிமல் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அருண் கூறுகையில், "பெங்களூருவில் நடைபெறும் பெரும்பாலான கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்களே ஈடுபட்டு வருவது உண்மை தான். இங்கிருக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. சம்பளம் அதிகம் கேட்கிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் தினமும் ஒரு மணிநேரம் கூடுதலாக பணியாற்றுகிறார்கள். விடுமுறை எடுக்காமல் பணியாற்றுவதால் எங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது.
வடமாநில தொழிலாளர்களாலும் பாதிப்பு ஏற்படுகிறது. முதலில் முன்பணம் பெற்று விட்டு சென்று விடுவார்கள். இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவது உண்டு. பயங்கரவாதிகள் பிரச்சினை, பாதுகாப்பு பிரச்சினை காரணமாக வடமாநில தொழிலாளர்களிடம் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை பெற்றுக் கொண்டும், முறையாக விசாரித்தும் தான் பணிக்கு அமர்த்துகிறோம். இங்குள்ள தொழிலாளர்களை புறக்கணிக்க வேண்டும் என்பது எங்களின் எண்ணம் இல்லை. எங்களது பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் தேவையாக உள்ளனர்" என்றார்.
விடுமுறை இன்றி வேலை
இதுகுறித்து ஜிகா அசோசியட்ஸ் நிறுவன உரிமையாளர் குருசாமி கூறும் போது "தென்னிந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் கடிமான வேலைக்கு தற்போது தயாராக இல்லை. அவ்வாறு வந்தாலும் கூலி அதிகமாக கேட்கின்றனர். குறைந்த நேரமே பணியாற்றுகிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் விடுமுறை இன்றி வேலை செய்கிறார்கள். 6 மாதம், ஒரு ஆண்டு கூட இங்கேயே தங்கி இருந்து வேலை செய்கிறார்கள். வடமாநில திருவிழாவான ஹோலி, துர்கா பூஜைக்கு மட்டுமே ஒரு வாரம் விடுமுறை எடுத்து செல்வார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக வடமாநில தொழிலாளர்கள் குடும்பமாக வந்து, இங்கு தங்கி இருந்து வேலை செய்வதில்லை. ஆண்கள் தான் 90 சதவீதம் பேர் வருவார்கள்.. கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கூடாரம் அமைத்து தங்கி வேலை செய்வது எங்களுக்கு பலமாக இருக்கும். பெண்கள், குழந்தைகளுடன் அந்த மாநில தொழிலாளர்கள் வருவதில்லை. ஒவ்வொரு வேலைக்கு ஏற்றபடி பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக தொழிலாளர்கள் வருகிறார்கள். இது சாதகமாக உள்ளது" என்றார்.
வேலை கிடைப்பதில்லை
இதுகுறித்து பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கட்டிட தொழிலாளி கரண் ராஜ் கூறுகையில், "எங்களது மாநிலத்தில் சரியாக வேலை கிடைப்பதில். இங்கு மாதத்திற்கு 20 முதல் 25 நாட்கள் கண்டிப்பாக வேலை இருக்கும். சம்பளமும் சரியாக கிடைக்கிறது. அங்கு கிடைப்பதை விட பெங்களூருவுக்கு வந்து வேலை பார்ப்பதால் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால் தான் அங்கிருந்து வந்து வேலை பார்க்கிறோம். குடும்பத்தை பிரிந்து இருப்பது கஷ்டம் தான்" என்றார்.
இதுகுறித்து தொழிலாளர்கள் துறை அதிகாரி தாமஸ் கூறுகையில் "கட்டுமான தொழில் மட்டும் இன்றி அனைத்து தொழில்களிலும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இங்குள்ள தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. வடகர்நாடக மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருவதால், அந்த தொழிலாளர்களும் அங்கேயே வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்களின் தேவை அதிகமாக இருப்பது உண்மை தான்" என்றார்.
வடமாநில மேஸ்திரிகளிடம்...
பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்த பிளம்பர் கோபி கூறுகையில் "பெங்களூருவில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாகி விட்டனர். இங்குள்ள தொழிலாளார்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள். ஆனால் குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள் சரியான நேரத்தில் வேலையை முடிப்பார்கள். கட்டிட வேலை, வர்ணம் பூசுதல், தச்சு வேலை, சென்ட்ரிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.
பிளம்பர் வேலையில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் இல்லை. பின்னால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அந்த தொழிலாளர்களை அழைக்க முடியாது என்பதும் ஒரு காரணம். என்றாலும், வடமாநில கட்டிட மேஸ்திரிகளிடம், நமது தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் வரும்" என்றார்.
சம்பளம் அதிகமாக கிடைக்கிறது
இதுபற்றி ராஜாஜிநகரில் சலூன் கடை நடத்தும் உரிமையாளர் ராஜூ கூறும் போது "எனது கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தங்குவதற்கு இடம், சாப்பாடு கொடுக்கிறேன். பெங்களூருவில் உள்ளவர்களை அழைத்தால் அடிக்கடி விடுமுறை எடுக்கிறார்கள். குழந்தைக்கு உடல் நிலை சரியல்லை என பல காரணங்களை சொல்வார்கள். வடமாநில தொழிலாளர்கள் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். 6 மாதத்திற்கு ஒரு முறை தான் விடுமுறை எடுக்கிறார்கள். இதனால் எனக்கு வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதே பலமாக உள்ளது " என்றார்.
இதுபற்றி அந்த கடையில் வேலை செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சப்தர் அலி கூறும் போது, "எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் வேலை செய்தால் ரூ.300 கிடைக்கும். பெங்களூருவில் ரூ.600 சம்பளம் கிடைக்கிறது. தங்கும் இடம், சாப்பாடு போக இந்த சம்பளம் கிடைக்கிறது. இதனால் உத்தரபிரதேசத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்தேன். குடும்பத்தை பிரிந்திருந்தாலும், அதிக சம்பளம் கிடைக்கிறது. இதன்மூலம் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்து கொள்ள முடிகிறது" என்றார்.
மொழியை கற்பது இல்லை
பெங்களூருவில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து பல ஆண்டுகளாக வேலை பார்த்தாலும், அவர்கள் கன்னட மொழியை கற்பதில்லை என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு சில வட மாநில தொழிலாளர்கள் கட்டுமானம் நடைபெறும் பகுதிகளில் பொருட்களை திருடுவது, குற்றங்களில் ஈடுபடுவது, கட்டுமான நிறுவன அதிபர்களிடம் முன் பணம் பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
வடமாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே போவதை தமிழக அரசு கண்டுகொள்ளாமலும் இருந்துவிடக்கூடாது. அவர்களின் வருகையால் ஏற்பட்டு இருக்கும் தாக்கம், பெருகி இருக்கும் குற்றம், நமது வேலைகளைச் செய்ய நம்மிடம் தொழிலாளர்கள் இல்லையா? இருந்தால் ஏன் அவர்கள் அதைச் செய்ய முன்வருவது இல்லை? என்ற கோணங்களிலும் ஆராய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படி இருந்தாலும் வடமாநில தொழிலாளர்கள் வருகையால் பலமும் இருக்கிறது, அவர்களால் பாதிப்பும் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.
தகர கொட்டகையில் வசிக்க விரும்புவதில்லை
பெங்களூருவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள், அங்கேயே சிறிய தகர கொட்டகை அமைத்து தங்கி வேலை பார்க்கிறார்கள். ஆனால் பெங்களூரு மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் தகர கொட்டகையில் வசிக்க விரும்புவதில்லை. வாடகை வீட்டில் தங்கி இருந்தே வேலைக்கு வருகிறார்கள். இதற்காக அதிக சம்பளம் கேட்பதுடன், அடிக்கடி விடுமுறை எடுத்து செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி இருப்பது கட்டிட மேஸ்திரிகளுக்கு உதவியாக உள்ளது.