முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொன்ற 2 பேர் கைது

பத்ராவதி அருகே முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-10-28 19:00 GMT

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஹொலேஹொன்னூர் பகுதியை சேர்ந்தவர் ரூபேஷ். இவர் சிவமொக்காவில் வீடு எடுத்து தங்கி ஆட்டோ ஓட்டி வந்தார். இவரும், பத்ராவதி தாலுகா காச்சி கொண்டனஹள்ளி பகுதியை சேர்ந்த குஷால் குமார்(வயது 35) மற்றும் குத்தா காலனி பகுதியை சேர்ந்த சோமசேகர்(33) ஆகியோரும் நண்பர்கள் ஆவார்கள்.

இவா்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி இரவு 3 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள மதுபான கடையில் வைத்து மது அருத்தி விட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் முன்விரோதம் காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ரூபேசை உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் பயங்கரமாக தாக்கினா். இதில் ரூபேஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பத்ராவதி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து 2 பேரையும் வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் குஷால் குமார் மற்றும் சோமசேகர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்