குடியரசு தினம்: அடாரி - வாகா எல்லையில் தேசியக்கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்

வாகா எல்லையில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

Update: 2024-01-26 12:27 GMT

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டம் அடாரி எல்லைப்பகுதி பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே அமைந்துள்ளது.

இருநாட்டு படையினரும் இந்த எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எல்லைப்பகுதியில் தினமும் காலை இருநாட்டு பாதுகாப்புப்படையினரும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமாகும். குறிப்பாக, இந்திய சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அடாரி - வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்வை கண்டுகளிப்பர்.

இந்நிலையில், 75வது இந்திய குடியரசுதின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அடாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

எல்லை பாதுகாப்புப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய தேசியக்கொடியை அசைத்தும், ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டும் உற்சாக குரல் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்