'பி.சி.ரோடு-சூரத்கல் நெடுஞ்சாலை பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்
மங்களூருவில் பி.சி.ரோடு-சூரத்கல் நெடுஞ்சாலையை சீரமைத்து கொடுக்கும்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களூரு:-
குண்டும், குழியுமான சாலை
தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தமழையால் முக்கிய சாலைகளில் குண்டும், குழிகள் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டும், குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் சிலர் கீழே விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மங்களூருவில் உள்ள பி.சி.ரோடு-சூரத்கல் சாலையில் அதிக குண்டும், குழிகள் காணப்படுகிறது. இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும்படி இந்திய ஜனநாயக வாலிபர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று பைக்கம்பாடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் தேங்கி நின்ற நீரில் செடிகளை நட்டுவைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். பின்னர் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து கொடுக்கும்படி கோஷமிட்டனர்.
சீரமைத்து கொடுக்க கோரிக்கை
இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த போராட்டகாரர்கள் கூறியதாவது:-
பி.சி.ரோடு-சூரத்கல் சாலையில் எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க ஏற்கனவே மாநில அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை. அந்த சாலையை மாவட்ட நிர்வாகம் உடனே சீரமைத்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் விபத்து குறையும்.
இல்லையென்றால் தொடர்ந்து விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கும். இந்த விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் எந்த நிவாரண தொகையும் வழங்குவது இல்லை. இதேபோல மங்களூருவில் பல இடங்களில் சாலைகள், கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. கூலுரில் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆனால் இதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை.
போராட்டம் நடத்தப்படும்
இந்த தேசிய நெடுஞ்சாலைப்பணிகள் மற்றும் புதிய பாலம் அமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்கும்படி நளின் குமார் கட்டீல் எம்.பி. மற்றும் பரத்ஷெட்டி எம்.எல்.ஏ.விற்கு பல முறை கோரிக்கை வைத்துவிட்டோம். அவர்கள் விரைவில் முடித்து கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.
ஆனால் பணிகளை முடிப்பது இல்லை. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாநில அரசின் அலட்சியத்தால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே உடனே மாநில அரசு இந்த பணிகளை முடிக்கும்படி கேட்டு கொள்கிறோம். இல்லைெயன்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.